கைரோ: சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த புலம்பெயர்வோரை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஏமன் அருகே கடலில் கவிழ்ந்து மூழ்கியதில் குறைந்தது 49 பேர் உயிரிழந்ததாகவும், 140 பேரை காணவில்லை என்றும் புலம்பெயர்வோருக்கான ஐநா சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.
சோமாலியாவின் வடக்கு கடற்கரையில் இருந்து சுமார் 260 சோமாலியர்கள் மற்றும் எத்தியோப்பியர்களை ஏற்றிக் கொண்டு ஏடன் வளைகுடா வழியாக படகு ஒன்று பயணித்தது. 320 கிலோ மீட்டர் பயணித்த நிலையில் அந்த படகு, ஏமனின் தெற்கு கடற்கரையில் வந்து கொண்டு இருந்த போது திடீரென மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், குறைந்தது 49 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படகில் பயணித்த ஏறத்தாழ 140 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
படகில் பயணித்தவர்களில் இதுவரை 71 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள், 6 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளைகுட நாடுகளில் வேலை தேடி செல்லும் அகதிகளுக்கு ஏமன் கடற்பரப்பு பிரதான வழித்தடமாக காணப்படுகிறது.
கடந்த 2021 முதல் 2023 ஆண்டுகளில் வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அகதிகளாக புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 27 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை என ஐநாவுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 3 லட்சத்து 80 ஆயிரம் அகதிகள் ஏமனில் வசித்து வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏமனை அடைவதற்கு, செங்கடல் அல்லது ஏடன் வளைகுடாவின் குறுக்கே அடிக்கடி ஆபத்தான, நெரிசலான படகுகளில் கடத்தல்காரர்களால் புலம்பெயர்ந்தோர் அழைத்துச் செல்லப்படுவதாகவும் கடந்த ஏப்ரல் மாதம், ஏமனை அருகே ஜிபூட்டி கடற்கரையில் இரண்டு கப்பல் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 62 பேர் வரை உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடல் வழித்தடத்தில் குறைந்தது ஆயிரத்து 860 பேர் இதுவரை உயிரிழந்து இருப்பதாகவும் அதில் 480 பேர் நீரில் மூழ்கி இறந்ததாகவும் ஐநாவுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. ஏமனில் நிலவும் உள்நாட்டு போருக்கு மத்தியில் வாழ்வாதாரம் தேடி செல்லும் மக்கள் இப்படி அடிக்கடி கடல் விபத்துகள் மூலம் உயிரிழப்பது தொடர் கதையாகி வருவதாக ஐநா வருத்தம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மத்திய காசாவில் இஸ்ரேல் படைகள் கொடூர தாக்குதல்! 100 பேர் படுகொலை! - Israel Gaza War