பிளாண்டயர்: ஆப்பிரிக்காவின் தென் கிழக்கு பகுதியில் மலாவி நாடு அமைந்துள்ளது. இதன் துணை அதிபராக சவ்லோஸ் சிலிமா (வயது 51) இருந்தார். இவர் தனது மனைவி உள்பட 9 பேருடன் ராணுவ விமானத்தில் தலைநகர் லிலோங்வேயில் இருந்து, 370 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்துள்ள முசுசு என்ற பகுதிக்கு நேற்று (ஜூன்.10) புறப்பட்டு சென்றார்.
அவர் பயணித்த ராணுவ விமானம் லிலொங்வேயில் இருந்து 45 நிமிடங்களில் முசுசு விமான நிலையத்தில் அடைய வேண்டிய நிலையில், திடீரென மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்துடனான தொடர்பினை விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் இழந்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து மலாவி நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா தேடுதல் பணியை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ரேடாருக்கு வெளியில் சென்ற விமானத்துடனான தொடர்பை பெற அணைத்து வகையிலும் முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் தேடுதல் பணிகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் தான் சிகன்காவா மலைப்பகுதியில் விமானம் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் பயணித்த சவ்லோஸ் சிலிமா உள்ளிட்ட யாரும் உயிர் பிழைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்று மலாவி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய வெளிச்சம் இல்லாததால் கூட விமானம் விபத்திற்குள்ளாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் துணை அதிபர் சவ்ரோஸ் சிலிமா அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்தார்.
இந்நிலையில், அவரது உயிரிழப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விமான விபத்து குறித்து மலாவி நாட்டின் அதிபர் லாசரஸ் சக்வேரா கூறுகையில், "துணை அதிபர் உயிரிழந்த நிகழ்வு எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இந்த சோக சம்பவம் நடந்ததற்காக நாட்டு மக்கள் வருத்தத்தில் உள்ளனர். ஒரு மலைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட போது அங்கே சிதிலம் அடைந்த விமானத்தின் பாகங்கள் கிடைத்தன.
உயிருடன் யாரும் மீட்கப்படவில்லை. துணை அதிபர் சென்ற விமானத்தை இயக்கியவர்கள் மிகுந்த அனுபவம் உடையவர்கள். இருப்பினும் ஏதோ ஒன்று விமானத்தில் தவறுதலாக ஏற்பட்டிருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஏமனில் அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 49 பேர் பலி! 140 பேர் மாயம்! என்ன நடந்தது? - Yemen Boat Accident