வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் நடைபெற்ற பேரணியில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் உலக அளிவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அமெரிக்காவின் பல அதிபர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் சிலர் மரணமடைந்துள்ளனர், சிலர் சிறுகாயங்கள் கூட இல்லாமல் உயிர் தப்பியுள்னர்.
ஆபிரகாம் லிங்கன்: அமெரிக்காவின் 16வது அதிபரான இவர் தான் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கிய முதல் அதிபர். 1865ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று ஜான் வில்க்ஸ் பூத் என்பவரால் வாஷிங்டனில் உள்ள ஃபோர்ட் திரையரங்கில் வைத்து சுடப்பட்டார். தலையில் சுடப்பட்ட ஆபிரகாம் லிங்கன் ஒரு நாள் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். கருப்பர் இன மக்களுக்காக ஆபிரகாம் லிங்கன் இருந்தமைக்காக கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஜேம்ஸ் கார்பீல்ட்: அமெரிக்காவின் 20வது அதிபரான இவர், தனது அதிபர் பொறுப்பை ஏற்று ஆறு மாதங்களில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1881ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி நியூ இங்கிலாந்து செல்வதற்கான ரயிலில் பயணிக்க வாஷிங்டன் ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்த போது, சார்லஸ் கிட்டோ என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வில்லியம் மெக்கின்லி: 1901ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பஃபல்லோ என்ற பகுதியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் அதிபர் வில்லியம் மெக்கின்லி நிகழ்ச்சி ஒன்றில் மக்களைச் சந்தித்து கைகுலுக்கும் போது, லியோன் எஃப்.சோல்கோஸ் என்பவரால் சுடப்பட்டார். படுகாயம் அடைந்தவர் சிகிச்சையில் இருந்தார். இருப்பினும், செப்டம்பர் 14ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்: அமெரிக்காவின் 32வது அதிபரான இவர், 1933ஆம் ஆண்டு பிப்ரவரியில் மியாமி பகுதியில் தேர்தல் நேரத்தில் திறந்த வெளி வாகனம் ஒன்றில் பரப்புரை ஆற்றிக் கொண்டிருந்த போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ரூஸ்வெல்ட் பாதிப்பு ஏற்படாத நிலையில், சிகாகோ மேயர் அண்டன் செர்மக் கொல்லப்பட்டார்.
ஹாரி எஸ். ட்ரூமன்: ரூஸ்வெல்டை தொடர்ந்து 33வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாரி எஸ்.ட்ரூமன் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. 1950ஆம் ஆண்டு வெள்ளை மாளிகை அருகே உள்ள பிளேர் மாளிகையில் அவர் தங்கியிருந்த போது அவர் மீது தாக்குதல் நடத்த இருவர் முயன்றனர். ஹாரி எஸ்.ட்ரூமன் உயிர் தப்பிய நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜான் எஃப்.கென்னடி: 1963ஆம் ஆண்டு டல்லாஸ் பகுதிக்கு அவரது மனைவி ஜாக்லின் கென்னடியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, நடைபெற்ற வாகன அணிவகுப்பில் சென்று கொண்டிருந்த போது சுடப்பட்டார். படுகாயம் அடைந்த கென்னடி பார்க்லாண்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
ஜெரால்ட் ஃபோர்ட்: 1975ஆம் அண்டு காலக்கட்டத்தில் அமெரிக்காவின் 38வது அதிபராக இருந்த இவர் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு தாக்குதல்களில் இருந்தும் இவர் தப்பித்துவிட்டார். ஒன்று கலிஃபோர்னியா கவர்னருடான சந்திப்பின் போது முயற்சிக்கப்பட்டபோது துப்பாக்கி சுடப்படவில்லை.
அதேபோல், 17 நாட்களுக்குப் பின்னர் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள விடுதி ஒன்றில் வெளியே நின்று கொண்டிருந்த போது, சாரா மோரெ என்பவர் துப்பாக்கியால் சுட முயற்சி செய்தார். ஆனால், ஜெரால்ட் ஃபோர்ட்டின் அருகே நின்று கொண்டிருந்த நபர் சுட வந்தவரின் கையைப் பிடித்ததால் அவர் உயிர் தப்பினார்.
ரொனால்ட் ரீகன்: 1981ஆம் ஆண்டு வாஷிங்டன்னில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாடிவிட்டு வாகன அணிவகுப்பில் இவர் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்த ஜான் ஹிங்க்லி ஜூனியர் என்பவர் துப்பாக்கியால் சுட முயன்றபோது அதிகாரிகள் ரொனால்ட் ரீகனைச் சுற்றி நின்று பாதுகாத்தனர். இதில் பத்திரிகைச் செயலாளராக இருந்த ஜேம்ஸ் பிராடி படுகாயம் அடைந்தார்.
ஜார்ஜ் W புஷ்: 2005-ல் ஜார்ஜியா நாட்டின் திபிலிசி பகுதியில் அந்நாட்டு மிகைல் சாகாஷ்விலியுடன் அணிவகுப்பின் போது அவர்கள் சென்ற வாகனத்தின் மீது குண்டு (hand grenade) வீசப்பட்டது. இருவரும் புல்லட் புரூஃப் பாதுகாப்பு கேடயத்திற்குப் பின்னால் நின்று கொண்டிருந்தனர். ஆனால், வீசப்பட்ட குண்டு வெடிக்காததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதையும் படிங்க: டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட சதியா? சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?