வாஷிங்டன்: வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதே நேரம் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில் அம்மாகாண செனட்டர் ஜேம்ஸ் டேவிட் வென்சை துணை அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு ஜேம்ஸ் டேவிட் வென்ஸ் சிறந்த தேர்வாக இருப்பார் என டிரம்ப் கூறினார்.
மேலும், தன்னுடன் அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்க வேன்ஸ் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வார் என்றும் டிரம்ப் தெரிவித்தார். அதேநேரம் துணை அதிபர் பதவிக்கு வென்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப்பைக் கடுமையாக எதிர்த்தவர் ஜேம்ஸ் டேவிட் வென்ஸ்.
2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரங்களின் போது டிரம்ப்பை அறிவற்றவர் என்றும் அமெரிக்காவின் ஹிட்லர் என்றும் வென்ஸ் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் ஜேம்ஸ் டேவிட் வென்ஸ் எப்படி டிரம்ப்பின் தீவிர விசுவாசியாக மாறினார் என்பது வியக்கத்தக்க ஒன்றாக காணப்படுகிறது.
கொலை முயற்சிக்கு ஆளான 2 நாட்களில் டிரம்ப் மீண்டும் பொது வெளியில் தோன்றி துணை அதிபர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த ஜூலை 14ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் பிரசார உரை ஆற்றிய போது 20 வயது தாமஸ் மேத்யூ குரூக்ஸ் (Thomas Matthew Crooks) என்ற இளைஞரால் டிரம்ப் சுடப்பட்டார்.
இந்த தாக்குதலில் காது பகுதியில் காயம் ஏற்பட்டு டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். டிரம்ப்பின் பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னதாக இளைஞர் நடத்திய தாக்குதலில் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் டேவிட் வென்சின் மனைவி உஷா சிலுகுரி வென்ஸ் இந்திய வம்சாவளி ஆவார். இந்திய பெற்றோருக்கு பிறந்த உஷா சிலுகுரிஒ வென்ஸ் அமெரிக்காவில் யாலே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: தேசவிரோத செயலில் ஈடுபட்டதா இம்ரான் கானின் கட்சி! தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தடையின் பின்னணியில் யார்? - Imran Khan Party Ban