வாஷிங்டன்: வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடப் போவதில்லை என அதிபர் ஜோ பைடன் அறிவித்து உள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரீஸ்க்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் பைடன் தெரிவித்து உள்ளார்.
இதன் மூலம் மீண்டும் பல்வேறு சாதனைகளை படைக்க கமலா ஹாரீஸ் தயாராகி வருகிறார். அண்மையில், அமெரிக்க அதிபர் தேர்தலை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட கணிப்புகளில் ஜோ பைடனுக்கு பதிலாக கமலா ஹாரீஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், மீண்டும் ஜனநாயக கட்சி வெல்வது அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டன.
இந்நிலையில் தான், அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஏற்கனவே முதல் கருப்பின துணை அதிபர், முதல் தெற்காசிய துணை அதிபர், முதல் இந்தோ ஆப்பிரிக்காவை சேர்ந்த துணை அதிபர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை கமலா ஹாரீஸ் படைத்துள்ளார்.
வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை வீழ்த்தும் பட்சத்தில் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர், முதல் இந்திய வம்சாவளி மற்றும் இந்தோ ஆப்பிரிக்கன் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.
சமீபத்திய கருத்துக் கணிப்புகள் முடிவுகளின் படி 10ல் 4 அமெரிக்கர்களின் ஆதரவு கமலா ஹாரீஸ்க்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு கடும் சவால் அளிக்கக் கூடிய நபராக கமலா ஹாரீஸ் விளங்குவார் என தெரிகிறது.
மன்னார்குடி டூ வாஷிங்டன்:
கமலா ஹாரீஸ் பிறப்பால் இந்திய மற்றும ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்தவர். அவரது தாயார் ஷியாமளா கோபாலன் திரூவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்டவர். பட்ட மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஷியாமளா கோபாலன், அங்கு ஜமைக்கா நாட்டை சேர்ந்த டொனால்ட் ஜே ஹாரீஸ் என்பவரை காதலித்து திருமண, செய்து கொண்டார்.
டொனால்ட் ஹாரீஸ் - ஷியாமளா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்தவர் தான் கமலா ஹாரீஸ். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஓக்லாண்ட் நகரில் கடந்த 1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி கமலா ஹாரீஸ் பிறந்தார். ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்ற கமலா ஹாரீஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.
அலமெடா மாவட்ட வழக்கறிஞராக தனது பணியை தொடங்கிய கமலா ஹாரீஸ் பின்னாட்களில் சான் பிரான்சிஸ்கோ நகரின் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 2010 மற்றும் 2014ஆம் ஆண்டு இரண்டு முறை கலிபோர்னியா மாகாணத்தின் அரசு வழக்கறிஞராக பொறுப்பு வகித்தார்.
தொடர்ந்து அரசியல் மீது ஆர்வம் கொண்ட கமலா ஹாரீஸ் 2017ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட்டு லோரெட்டா சான்செசை வெற்றி பெற்ற கமலா ஹாரீஸ், அமெரிக்க அரசியலில் மேலவை உறுப்பினரான முதல் தெற்காசிய அமெரிக்கர் என்ற சிறப்பை பெற்றார்.
பராக் ஒபாமாவின் தலைமையின் கீழ் நிதி, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த கமலா ஹாரீஸ் குறைந்த ஆண்டுகளிலேயே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடிய அளவுக்கு அனைவருக்கும் பரீட்சியமான முகமாக மாறினார். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக கமலா ஹாரீஸ் அறிவித்தார்.
பின்னாட்களில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் அவருடன் இணைந்து பணியாற்றப் போவதாக கமலா ஹாரீஸ் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து துணை அதிபராக கமலா ஹாரீஸ் அறிவிக்கப்பட்டு வெற்றியும் பெற்றார். தற்போது நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் வெற்றி பெற்றால் பராக் ஒபாமாவுக்கு பிறகு அமெரிக்காவின் முதல் பெண் மற்றும் முதல் ஆசிய-அமெரிக்க அதிபர், மற்றும் இரண்டாவது கறுப்பின அமெரிக்க அதிபர் என்ற சிறப்புகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் ரேசில் இருந்து ஜோ பைடன் விலகல்! கமலா ஹாரீஸ்க்கு ஆதரவு! பைடன் கணக்கு என்ன? - US President Biden nominate kamala