டோக்கியோ (ஜப்பான்): ஜப்பானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷிகெரு இஷிபா, நாடாளுமன்ற கீழவையில் தமது முதல் உரையை வெள்ளிக்கிழமை ஆற்றினார்,. அப்போது அவர், "பல வளர்ந்த நாடுகளைப் போலவே ஜப்பானிலும் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
இதன் காரணமாக நாட்டின் மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொள்கிறது. உலக வங்கியின் கூற்றுப்படி, சிறிய நாடான மொனாக்கோவிற்கு அடுத்தபடியாக உலகின் பழமையான மக்கள்தொகை கொண்ட நாடு ஜப்பான். ஆனால், கடந்த ஆண்டு அதன் பிறப்பு விகிதம் 1.2 ஆக இருந்தது.
அதாவது, நாட்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றெடுக்கும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை 1. 2 ஆக இருந்தது. இந்த விகிதம், மக்கள்தொகையை பராமரிக்க தேவையான 2.1 என்ற விகிதத்துக்கு குறைவானதாகும். இந்தப் போக்கு "அமைதியான அவசரநிலை"யை போன்றது. பெண்களுக்கு உகந்த வேலை நேரம் போன்ற அவர்களின் குடும்ப வாழ்வை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஊக்குவிக்கும்" என்று ஷிகெரு இஷிரா பேசினார்.
இன்றைய உக்ரைன் நாளைய கிழக்கு ஆசியாவாக இருக்கலாம் என்று பலர் அஞ்சுகின்றனர். உக்ரைனில் போர் தடுப்பு நடவடிக்கைகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை? என்றும் இஷிபா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். மேலும், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தை முன்னிறுத்தி, சர்வதேச சமூகம் பெரிய அளவில் பிளவுப்பட்டு நிற்கின்றது எனவும் இஷிபா வருத்தத்துடன் கூறினார்.
இதையும் படிங்க: ஈரான் Vs இஸ்ரேல் மோதல்! பெட்ரோல் தட்டுப்பாடு வருமா?
தைவானை மையமாக கொண்டு. ஜப்பானுக்கும், சீனாவுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்றுவரும் நிலையில், தமது முதல் நாடாளுமன்ற உரையில் சீனா குறித்து இஷிபா நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால், சீன இராணுவ விமானம் ஜப்பானிய வான்வெளியில் சமீபத்தில் ஊடுருவியது. சீனாவின் இதுபோன்ற அத்துமீறல்களை குறிப்பிடும் விதத்தில், ஆசியாவின் பாதுகாப்புச் சூழல், "இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து மிகவும் கடுமையானது" என்று சில தினங்களுக்கு முன் கூறியிருந்த இஷிபா, நேட்டோவின் வழியில் பிராந்திய இராணுவக் கூட்டணியை உருவாக்குவதற்கு ஆதரவு அளித்தார்.
இந்த நிலையில், இன்றைய உக்ரைன் நாளைய கிழக்கு ஆசியாவாக இருக்கலாம் என்று பலர் அஞ்சுகின்றனர் என்று இஷிபா இன்று தமது நாடாளுமன்ற உரையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.