கானா: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டிருந்த நகர மேயர் உள்ளிட்ட 27 பேர் இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு ஹிஸ்புல்லாவின் முக்கிய கமாண்டர் ஜலால் முஸ்தாபா ஹரிரி என்பவரை குறிவைத்து கானா பகுதியில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது.
ஆனால், உண்மையில் மக்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டிருந்த முனிசிபல் கவுன்சில் கூட்டத்தினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த கானா நகர மேயர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள லெபனான் தற்காலிக பிரதமர் நஜிப் மிகாதி, "முனிசிபல் கவுன்சில் கூட்டத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியிருக்கிறது. நபாதிஹ் பகுதியில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மேற்கொள்வது குறித்து மேயர் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இந்த தாக்குதலில் மேயர் உட்பட 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்,"என்று கூறினார். புதன்கிழமையன்று 138 வான்வெளி தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டதாக லெபனான் கூறியுள்ளது. பதிலடியாக இஸ்ரேல் மீது 90 தாக்குதல்களை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஹிஸ்புல்லா தாக்குதலில் நான்கு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்