பெய்ரூட்: ஐநா பிரகடனம் செய்த பாதுகாப்பு மண்டலத்துக்கு வெளியே வசிக்கும் லெபானின் தெற்கு பகுதியை சேர்ந்த மக்கள் வெளியேற வேண்டும் என்று வியாழக்கிழமையன்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தரை வழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்துவதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.
ஆயுதகிடங்குகள், கண்காணிப்பு நிலைகள் உள்ளிட்ட லெபனான் முழுவதும் 200 ஹிஸ்புல்லா இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பதாக இஸ்ரேல் படைகள் கூறியுள்ளன. பெய்ரூட்டின் புறநகர் பகுதியை நோக்கி இரவு முழுவதும் தொடர்ச்சியான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது. ஹிஸ்புல்லா இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவராக முகமது அனிசி உட்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
தெற்கு லெபனான் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலில் 9 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் ஏவுகனை தாக்குதலுக்கு எதிராக லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியிருக்கிறது.
லெபனான் மீதான தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், "லெபானில் 28 சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு லெபனான் பகுதியில் 30க்கும் மேற்பட்ட மருத்துவ வசதிகள் மூடப்பட்டுள்ளன. பெய்ரூட்டில் இருந்து 5 மருத்துவமனைகள் முழுவதுமாகவோ அல்லது பகுதி அளவிலோ மூடப்பட்டுள்ளன," என்று கூறியுள்ளது.