ஜெருசலேம்: லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை சேமித்து வைத்திருக்கும் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தப்போவதால், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களில் வசிப்போர் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுமார் ஓராண்டாக இஸ்ரேல் ராணுவம் - ஹிஸ்புல்லாக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வரும் மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இச்சூழலில் லெபனான் மக்களுக்கு மேற்கண்ட எச்சரிக்கையை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
லெபனானின் நூற்றுக்கணக்கான பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் ஏற்கெனவே விமானப்படை தாக்குதலை தொடங்கிவிட்ட நிலையில், தொடர்ந்து ஹிஸ்புல்லாக்கள் முகாமிட்டிருக்கும் வெவ்வேறு பகுதிகளை குறி வைத்து வருகிறது. தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் உள்ள பல்வேறு கிராமங்களில் வசிப்பவர்கள் தங்கள் நகரங்கள் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டனர்.
50 பேர் பலி; 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம்:
அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனமும் பல்வேறு பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதை அறிவித்தது. லெபனான் பகுதியில் இன்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஏஎஃப்பி செய்தி தகவல் தெரிவிக்கிறது.
லெபனான் சுகாதாரத் துறை அமைச்சகமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. எல்லை தாண்டிய மோதல்களில் கடந்த ஓராண்டில் இதுவே ஒரு நாளின் அதிகபட்ச உயிரிழப்பாகும். இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசநாயக
இதைத் தொடர்ந்து ஹமாஸுக்கு பதிலடி கொடுக்க பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது இஸ்ரேல் போர்த் தொடுத்தது. இந்தத் தாக்குதலில் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாலஸ்தீனியர்கள் ஆவர்.
இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் இருந்தவாறு இஸ்ரேல் ராணுவ நிலைகளை ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தனர். இதனால் இஸ்ரேல் - ஹிஸ்புல்லாக்களிடையே ஏற்பட்ட மோதலானது கடந்த ஓராண்டாக புகைந்து வந்த நிலையில், தற்போது போரை நோக்கி நகர்ந்துள்ளது.