ஒன்டாரியோ: கனடா, ஒன்டாரியோ மாகாணம், பாமன் வில்லே நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த ஏப்.29ஆம் தேதி கொள்ளை நடந்தது. இதில் தொடர்புடைய சந்தேக நபர் சரக்கு வேனில் செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த போலீசார், அந்த நபரைப் பிடிப்பதற்காக சரக்கு வேனை துரத்திச் சென்றனர்.
அப்போது அந்த சரக்கு வேன் நெடுஞ்சாலை 401இல் அதிவேகமாகச் சென்றது. இதில், அந்த சரக்கு வேனைப் பிடிப்பதற்காக, போலீஸ் வாகனமும் அதிவேகத்தில் சென்றது. அப்போது அந்த சரக்கு வேன் எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும், இதில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் தொடர்ந்து மோதியதால் பெரும் விபத்து நேர்ந்தது.
இந்த விபத்தில், ஒரு காரில் இருந்த இந்தியத் தம்பதி, அவரது 3 மாத பேரக்குழந்தை மற்றும் சரக்கு வேனில் சென்ற சந்தேக நபர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் காரில் இருந்த 33 வயது தந்தை மற்றும் 27 வயது தாய் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். தற்போது இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சரக்கு வேனில் சந்தேக நபருடன் பயணித்த 38 வயது நபரும் விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக டோரன்டோவுக்கான இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவலில், "401 தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மணிவண்ணன் - மகாலெட்சுமி தம்பதியினர் மற்றும் அவரது பேரக்குழந்தை ஆகிய மூவரும் உயிரிழந்தனர். அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள். மேலும், அவரது குடும்பத்திற்குத் தேவையான உதவிகள் செய்யப்படும்" என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கிழக்கு லண்டனில் திடீர் கத்திக்குத்து தாக்குதல்! 13 வயது சிறுவன் பலி - போலீசார் உள்பட 4 பேர் படுகாயம்! - London Knife Attack