டெல் அவிவ் : இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் தூதரகம் சேதமடைந்தது. இதில் ஈரானிய அதிகாரிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்து இருந்தது. இதனால் எந்த நேரத்திலும் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படலாம் என்ற அச்சம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் நிலவியது. இந்நிலையில், இஸ்ரேல் மீது ட்ரோன் உள்ளிட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவியது.
170 ட்ரோன், 30க்கும் மேற்பட்ட க்ரூஸ் வகை ஏவுகணைகள், 120க்கும் மேற்பட்ட கண்டம் தாண்டி இலக்கை அழிக்கும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது. ஈரான் அனுப்பிய ஏவுகணைகளில் 99 சதவீதத்தை தங்களது வான் பாதுகாப்பு சாதனத்தின் மூலம் இடைமறித்து தாக்கி அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கி உள்ள இந்தியர்களுக்கு புதிதாக வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ளது. இஸ்ரேலில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் சிக்கி உள்ள இந்தியர்கள் பொறுமையாக இருக்குமாறும், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
இஸ்ரேலில் நிலவும் சூழல் குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும், அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை தூதரகத்துடன் இணைப்பில் இருக்கவும், அவர்கள் குறித்த தகவல்களை பகிரவும் தூதரகம் லிங் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அத்தியாவசிமற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் என்றும் பொறுமையாக, உள்ளூர் நிர்வாகம் வெளியிட்டு உள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது. அவசர உதவி தேவைப்படும் நபர் தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை மற்றும் மின்னஞ்சல் முகவரியை தூதரகம் வெளியிட்டு உள்ளது.
ஈரானின் திடீர் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலில் உள்ள அரசுப் பள்ளிகள் திங்கட்கிழமை வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேநேரம் தனியார் பள்ளிகள் மற்று கல்வி நிறுவனங்கள் தொடர்து இயங்கி வருவதாக கூறப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அரசு வலியுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க : இஸ்ரேல் - ஈரான் போர்.. பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள்? இந்தியா யார் பக்கம்? - Iran Israel War