இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடர்ந்து பிப்ரவரி 9ஆம் தேதி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றும் தொடர்ந்து முன்னிலையில் இருந்தும் வருவதாக கூறப்படுகிறது.
அடுத்த பிரதமருக்கான போட்டியில் இம்ரான் கான் அணியும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் முஸ்லீம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தலை ஒட்டி நடந்த வன்முறைகளை தொடர்ந்து நாட்டில் மொபைல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. மேலும், தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்து உள்ளார். அதேநேரம் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாகி வருவதாகவும், பல்வேறு இடங்களில் இம்ரான் கானின் ஆதரவு வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மொத்தம் உள்ள 265 இடங்களில், இன்னும் 10 தொகுதிகளில் முழுமையான முடிவுகள் வெளியாகவில்லை என தகவல் கூறப்படுகிறது. இருப்பினும், இம்ரான் கான் ஆதரவு அணி 100 இடங்களையும், நவாஸ் ஷெரிப்பின் கட்சி 72 இடங்களையும் பிடித்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இம்ரான் கான் ஆதரவு அணி தலைமையில் தான் பாகிஸ்தானில் ஆட்சி அமையும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : "சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் கடந்த 5 ஆண்டுகளில் நாடு கண்டது" - மக்களவையில் பிரதமர் மோடி!