ஒஹியோ: அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை கைப்பற்ற ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளராக மீண்டும் ஜோ பைடன் களமிறங்க உள்ள நிலையில், குடியரசு கட்சி தரப்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஒஹியோ மாகாணத்தில் நடந்த பேரணியில் பேசிய முன்னாள் அதிபர் டிரம்ப், நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் அமெரிக்காவில் ரத்தக்களரி ஏற்படும் என எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிபர் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், நாட்டில் மீண்டும் ஒரு தேர்தலை மக்கள் சந்திக்க நேரிடுமா என்பது குறித்து தனக்கு தெரியாது என்று எச்சரித்தார்.
அதிபர் பைடனின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீரழிவை சந்தித்து உள்ளதாகவும், சமூக பாதுகாப்பு என்பதை மக்கள் பெறவே முடியாது என்றும் டிரம்ப் கூறினார். மேலும் ஒழுங்கற்ற மருத்துவ வசதிகள் காரணமாக நாட்டில் மூத்த குடிமக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவம், சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக டிரம்ப் கூறினார். பேரணியின் போது சீனாவை கடுமையாக விமர்சித்த டிரம்ப், மெக்சிகோவில் கார் தயாரிப்பு தொழிற்சாலைகளை உருவாக்கி அமெரிக்காவில் கார்களை விற்பனை செய்ய சீனா திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.
மேலும், தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவில் கார் விற்பனை செய்ய முடியாத நிலையை சீனாவுக்கு உருவாக்குவேன் என கூறினார். கடந்த 2020ஆம் ஆண்டு 2வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவோம் என எதிர்பார்த்து காத்திருந்த டிரம்புக்கு, தேர்தல் தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள கேபிடல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் டிரம்ப் மூளையாக செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. போராட்டக்காரர்களை தூண்டி விட்டு டிரம்ப், கலவரத்தை ஏற்படுத்தியதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, டிரம்ப்பின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ள அமெரிக்க அதிபர் பைடன், அதிக வயது மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால் இது போன்று டிரம்ப் பேசி இருப்பதாக கூறினார்.
இதையும் படிங்க : மக்களவை தேர்தல்: இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கலா? ஜெய் ஷா விளக்கம்!