துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் 75 ஆண்டுகளில் காணாத அளவாக கனமழை கொட்டித் தீர்த்தது. துபாய் உள்ளிட்ட பெரு நகரங்கள் நீரில் தத்தளிக்கின்றன. துபாயில் உள்ள நெடுஞ்சாலைகளில் இடுப்பளவுக்கு தேங்கிய மழைநீரில் கார்கள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.
துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதை கடல் போல் காட்சி அளிக்கிறது. உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் தொடர் கனமழையால் முற்றிலும் முடங்கி காணப்படுகிறது. ஓடுபாதைகளில் மழை நீர் தேங்கிய நிலையில், குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரில் விமானங்கள் மிதக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தொடர் கனமழையால் பல்வேறு நாடுகளில் இருந்தும், துபாயில் இருந்தும் விமான சேவைகள் வெகுவாக தடைபட்டு உள்ளன. துபாயின் அடையாளங்களான துபாய் மால், எமிரேட்ஸ் மால் ஆகிய இரு வணிக வளாகங்களுக்கும் மழை நீர் புகுந்து தத்தளிக்கிறது. துபாயின் மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில் தண்ணீர் புகுந்து குளம் போல் தேங்கி நிற்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
ஓராண்டில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாலேயே இந்த நிலை ஏற்பட்டதாக துபாய் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஏறத்தாழ 120 மில்லி மீட்டர் மழை ஒரே மாலைப் பொழுதில் கொட்டித் தீர்த்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தண்ணீர் புகுந்த வீடுகளுக்குள் சிக்கிக் கொண்ட மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் போலீசார், மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர். தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துடிக்கப்பட்ட நிலையில், புர்ஜ் கலிபா உள்ளிட்ட மிக உயரமான கட்டடங்கள் மீது பிளாஷ் லைட் பொருத்தப்பட்டு மக்களுக்கு வழிகாட்டப்படுகின்றன.
குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை பம்பு முலம் உறிஞ்சி எடுக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய பகுதிகளும் கனமழை பெரு வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அண்டை நாடான ஓமனில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏறத்தாழ 18 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரேபிய தீபகற்ப பகுதியை கடந்து சென்ற மிகப் பெரிய புயலே இந்த பெரு மழைக்கு காரணம் என்றும் அது தற்போது ஓமன் வளைகுடாவில் உலாவுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புயல் காரணமாக ஓமன் மற்று தென் கிழக்கு ஈரானில் வழக்கத்துக்கு மாறான மழை கொட்டித் தீர்த்து உள்ளது.
ஓமனில் மழை வெள்ளத்தில் 9 பள்ளி குழந்தைகள், 3 பெரியவர்களுடன் கூடிய வாகனம் இழுத்துச் செல்லப்பட்டது. நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு உள்ளது. இதுவரை 18 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ள நிலையில், இருவரை காணவில்லை எனக் கூறப்படுகிறது. திடீர் புயல், கனமழை பெரு வெள்ளத்தால் வளைகுடா நாடுகள் திகைத்துப் போய் உள்ளன.
இதையும் படிங்க : அமேதி தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? என்ன சொல்கிறார் ராகுல்? - Lok Sabha Election 2024