புளோரிடா: உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய நேரப்படி நேற்று (நவ.05) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் போட்டியிட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, எலக்ட்டோரல் காலேஜ் முறையில் நடைபெற்ற இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், அமெரிக்காவில் மொத்தமுள்ள 538 எலக்ட்டோரல் காலேஜ் வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார்.
அந்த வகையில், ட்ரம்ப் 277 எலக்ட்டோரல் காலேஜ் வாக்குகளையும், கமலா ஹாரிஸ் 224 எலக்ட்டோரல் காலேஜ் வாக்குகளையும் பெற்றுள்ளதன் அடிப்படையில் ட்ரம்ப் மீண்டும் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக பதவியேற்கவுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் டிரம்ப் இன்று புளோரிடாவில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக, மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தலில் நாம் பெற்ற வெற்றி புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நமக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: "வரலாற்று வெற்றி"... டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
மக்களுக்கு சேவை செய்வதே உலகத்தில் மிகவும் முக்கியமான வேலை. உங்களுக்கு நான் அளித்த வாக்கை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இக்கட்டான சூழலில் எனக்குத் துணையாக இருந்த என் குடும்பத்தினர் மற்றும் மக்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த நேரத்தில் அனைத்து மக்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். உங்களுக்காக, உங்கள் குடும்பத்தினருக்காக, உங்கள் எதிர்காலத்திற்காக நான் போராடுவேன். ஒவ்வொரு நாளும் என் உடலில் உயிர் இருக்கும் வரை நான் போராடுவேன்.
மேலும், தகுதியான ஒரு வலுவான, பாதுகாப்பான மற்றும் வளமான அமெரிக்காவை உங்களுக்கு வழங்கும் வரை நான் ஓயமாட்டேன். இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும், மேலும் இது அமெரிக்க நாட்டை சீரமைத்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல உதவும்" என்று டிரம்ப் உணர்ச்சி பொங்க பேசினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்