டெய்ர் அல்-பலாஹ்: மத்திய காசாவில் இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெய்ர் அல்-பலாஹ் நகரில் அல்-அக்ஸா மருத்துவமனைக்கு அருகில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்டது என மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என மருத்துவமனை பதிவுகள் காட்டுகின்றன. மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளது.
மசூதி மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேலிய ராணுவம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. சமீபத்திய தாக்குதல் காரணமாக காசாவில் பாலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கையை 42 ஆயிரத்தை எட்டியுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தென் கொரியாவுடன் நல்லிணக்கத்தை நிராகரிப்பது என நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வடகொரியா திட்டம்
அந்த அமைச்சகம், பொதுமக்கள் மற்றும் போராளிகளின் இறப்புகள் எண்ணிக்கையை வேறுபடுத்தவில்லை. எனினும் இறந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். ஹிஸ்புல்லா, ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல், லெபனான் மீது குண்டுவீசி தாக்கியதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்பிராந்தியத்தில் அதிகரிக்கும் தாக்குதல்களால் பாலஸ்தீனிய அகதிகள் உள்பட லெபனானில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வெளியேறினர். அதே நேரத்தில் காசாவில் போர் தொடங்கியதன் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பேரணிகள் நடத்தப்பட்டன.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு எல்லையில் உள்ள புறநகரான தஹியேஹ் பகுதியிலிருந்து வெளியேறுமாறு மக்களை இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை அப்பகுதியில் பலத்த வெடி சப்தங்கள் கேட்டன.
ஹிஸ்புல்லாவின் ஆதிக்கம் நிறைந்த மக்கள் அதிகம் வசிக்கும் புறநகர்ப் பகுதியில் குண்டுவெடிப்புகளால் வெளிச்சம் ஏற்படுவது போன்ற வீடியோ காட்சியை அசோசியேட்ஸ் பிரஸ் வெளியிட்டுள்ள வீடியோ காண்பிக்கிறது.
இதற்கிடையே, ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், வடக்கு இஸ்ரேலின் மனாரா குடியேற்றம் அருகே இஸ்ரேல் படையை, ஒரு பெரிய ராக்கெட் மூலம் வெற்றிகரமாக குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து லெபனானில் பல ஹமாஸ் தளபதிகளை இஸ்ரேல் கொன்றுள்ளது. மேலும், ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லாக்களின் உயர்மட்டத் தலைவர்களையும் இஸ்ரேல் குறிவைத்து அழித்து வருகிறது.
கடந்த இரண்டு வாரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் குடிமக்கள், மருத்துவர்கள் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் உட்பட குறைந்தது 1,400 லெபனானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்