பீஜிங் : சீனாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் வீடுகள், கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. ரிக்டர் அளவுகோளில் நில நடுக்கம் 7 புள்ளி 1ஆக பதிவானதாக சீன நில அதிர்வு நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது. அக்ஷு மாகாணத்தில் உள்ள மாண்டரின் அடுத்த வுஷி பகுதியில் அதிகாலை 2 மணி அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் 6 பேர் வரை காயம் அடைந்ததாகவும், அதிலும் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இயற்கை சீற்றத்தால் 47 வீடுகள் முற்றிலும் உருக்குலைந்ததாகவும், 78 குடியிருப்புகள் மற்றும் ஒரு சில இடங்களில் விவசாய கட்டடங்கள் சேதமானதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நில நடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் மின்சாரம் உள்ளிட்ட இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும், தற்போது மீண்டும் மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு சாதாரண நிலை திரும்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நில அதிர்வுக்குள்ளான வுஷி பகுதியில் ஏறத்தாழ 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் வசதித்து வருகின்றனர்.
காலை 7 மணி முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் சோதனை மேற்கொள்ளப்பட்டு ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருவதாக சீன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நில அதிர்வு ஏற்பட்ட இடத்தில் 200க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் களமிறக்கப்பட்டு மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தலைநகர் டெல்லி, என்.சி.ஆர் உள்ளிட்ட எல்லையோர பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சீனாவின் அதிர்வலையை தொடர்ந்து கஜகஸ்தான் பகுதியிலும், 6 புள்ளி 2 என்ற ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : மாலத்தீவு அதிபரின் இந்திய எதிர்ப்பால் பறிபோன உயிர்! வன்மத்தின் உச்சமா?