கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பெர்னார்டினோ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவி நிதீஷா கந்துலா (23), கடந்த மே 28 அன்று திடீரென காணாமல் போயுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளது.
பின்னர், இதுகுறித்து போலீசார் நிதீஷாவுக்கு பழக்கமான வட்டாரத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், நிதிஷா காணாமல் போவதற்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பல இடங்களில் நிதிஷாவை தேடி பார்த்த போலீசார், மே 30 அன்று மாணவியைக் காணவில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்து தேடுதல் பணியை முடுக்கியுள்ளனர்.
அத்துடன், நிதிஷாவின் அடையாளங்களை வெளியிட்டுள்ள போலீசார் ''காணாமல் போன மாணவி 5 அடி 6 அங்குல உயரம் மற்றும் சுமார் 72 கிலோ இருப்பார் என்றும், கருப்பு முடி மற்றும் கறுப்பு நிற கருவிழி கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், மாணவி குறித்து தகவல் தெரிந்தால் உடனே (909) 538-7777 அல்லது LAPD இன் (213) 485-2582 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன், மாணவி நிதிஷா கலிபோர்னியா ரெஜிஸ்ட்ரேஷன் கொண்ட டொயோட்டா கரோலா காரை பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த காருடைய நிறம் பற்றி குறிப்பிடவில்லை.
அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன. கடந்த மாதம் 26 வயதான ரூபேஷ் சந்திர சிந்தகிந்த் என்ற இந்திய மாணவர் சிகாகோவில் காணாமல் போனார். அவரை தேடும் பணிகளும் தொடர்ந்து வருகிறது.
அதேபோல, கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தைச் சேர்ந்த அப்துல் அர்பத் (25) என்ற மாணவர் மாயமான நிலையில், ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் நகரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதே மார்ச் மாதம், இந்தியாவைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் அமர்நாத் கோஷ் (34) என்பவர் மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜனவரியில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மாணவர் அகுல் தவான் (18) என்பவர் மர்மமான முறையில் இறந்தார். அவர் அதிக மது குடித்ததனால் இறந்ததாக சொல்லப்பட்டது. இந்த வரிசையில் தற்போது மற்றுமொரு இந்திய மாணவி மாயமாகியிருப்பது அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வான் சாகசத்தில் விபரீதம்! விமானங்கள் மோதிய விபத்தில் விமானி பலி! வீடியோ வைரல்!