நியூயார்க் : 2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு அறிக்கையின்படி போர் உள்ளிட்ட சிக்கலான தன்மை கொண்ட நாடுகளில் வசிக்கும் 45.50 கோடி மக்கள் வறுமையின் கோரப்பிடியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு அறிக்கையை ஐநா வளர்ச்சி திட்டம், ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள முன்னெடுப்பு முயற்சி ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கையின்படி உலகில் உள்ள 110 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருப்பது தெரியவந்துள்ளது. போர், அமைதியின்மை நிலவும் நாடுகளில் வசிக்கும் 40 சதவிகித மக்கள் வறுமையின் கோரப்பிடியில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் நடக்கும் நாடுகளில் வசிக்கும் ஏழைகளில் நான்கு பேரில் ஒருவர் மின்வசதி இன்றி இருப்பதாக தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் போர் உள்ளிட்ட சிக்கல்கள் இல்லாத நாடுகளில் வசிக்கும் 20 ஏழைகளில் ஒருவர் மட்டுமே மின்வசதி இன்றி இருக்கின்றனர். இதே போல போர் நடக்கும் நாடுகளில் குழந்தைகள் கல்வி 4.4 சதவிகிதம், சத்துணவு .7.2 சதவிகிதம்,குழந்தை இறப்பு விகிதம் 1.1 சதவிகிதம் என இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
இதையும் படிங்க : வளர்ச்சிக்கான திட்டத்தில் இந்தியாவின் இடர்பாடு: வறுமை ஒழிப்பா? அதிகரிக்கும் பொருளாதார சமத்துவமின்மையா?
உதாரணமாக ஆப்கானிஸ்தானில் 2015-16 ஆம் ஆண்டு முதல் 2022-23ஆம் ஆண்டு வரை மிகவும் சிக்கலான சூழல் நிலவியது. இந்த ஆண்டுகளில் 53 லட்சத்துக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் மக்கள் வறுமையின் பல்வேறு பரிணாமங்களில் வாழ்ந்தனர். குறிப்பாக 2022-23ஆம் ஆண்டில் மட்டும் 64.9 சதவிகிதம் பேர் அதாவது மூன்றில் இரண்டு நபர்கள் ஏழைகளாக இருந்தனர்.
இது குறித்து பேசிய ஐநா வளர்ச்சி திட்டத்தின் நிர்வாக அதிகாரி அச்சிம் ஸ்டெய்னர்,"நாடுகளுக்கு இடையேயான மோதல்கள் அண்மை காலங்களில் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் உயிரிழப்புகளும் அதிகரித்திருக்கின்றன. லட்சகணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ளது,"என்றார்.
இது குறித்து பேசிய ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள முயற்சி இயக்குநர் சபினா அல்கைரே,"எங்களது ஆய்வின்படி 112 நாடுகளில் வசிக்கும் 630 கோடி பேரில் 110 கோடி பேர் ஏழைகளாக உள்ளது தெரியவந்துள்ளது," என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்