சென்னை: கோடைக் காலம் தொடங்கி வெயில், மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் பச்சிளம் குழந்தைகள் மட்டும் என்ன விதிவிலக்கா.. அவர்களும் இந்த சூடு காரணமாக பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். அதில் மிக முக்கியமான ஒரு பிரச்சனை சூடு பிடிப்பது.
பச்சிளம் குழந்தைகள் சிறுநீர் கழித்தவுடன் காரணமே இன்றி கத்தி கூச்சலிட்டு அழுவார்கள். எதற்கு அழுகிறார்கள் என்பது தெரியாமல் பெற்றோர் திணறிப்போகும் நிலையில், பலர் வீட்டில் ஸ்டாக் இருக்கும் உட்வார்டின் க்ரைப் வாட்டர் (Woodward's Gripe Water) எடுத்து ஒரு மூடியைக் குழந்தையின் வாயில் ஊற்றி விடுவார்கள். பலர் பயத்தில் அடித்துக்கட்டி மருத்துவமனைக்கே சென்று விடுவார்கள்.
பெற்றோர் முதலில் பச்சிளம் குழந்தையின் மொழியை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். குழந்தை அழுதால் உடலின் வயிறு, காது, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் மெதுவாக அழுத்திப் பார்க்க வேண்டும். அழுத்தும்போது குழந்தை அழுதால் அது வலியால் அழுகிறது என்பதைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் சிகிச்சையைத் திட்டமிட வேண்டும். ஆனால் குழந்தைக்குச் சூடு பிடித்தால் சிறுநீர் கழித்தவுடன் அழுக ஆரம்பிக்கும். அந்த குழந்தைக்கு என்ன மருந்து கொடுப்பது? என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கும் நிலை ஏற்படும்.
இதையும் படிங்க: சண்டை போட்டாலும் காதல் குறையாமல் இருக்க வேண்டுமா? உங்களுக்காகத்தான் இந்த தகவல்.! - Romantic Things To Do With Partner
இது குறித்து, முனைவர் கா.சாந்தி எழுதி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்ட "நாட்டுப்புற மருத்துவம் ஓர் ஆய்வு" என்ற புத்தகத்தில் தகவல் இடம் பெற்றுள்ளது. அதை இங்கே பார்க்கலாம். பச்சிளம் குழந்தை சூடு பிடித்து அழுதால், கைகளைச் சுத்தமாகக் கழுவி விட்டு, உள்ளங்கையில் கொஞ்சம் தாய்ப்பால் எடுத்து, அதனுடன் ஒரு சொட்டு விளக்கெண்ணெய்யைச் சேர்த்து, குழைக்க வேண்டும். நன்றாகக் குழைத்து வெண்ணெய் போல் வரும்போது அதை அப்படியே எடுத்துக் குழந்தையின் நாக்கில் தடவி விட்டால் போதும். குழந்தையின் உடல் உஷ்ணம் தணியும். அதே போல விளக்கெண்ணெய்யைக் குழந்தையின் கால் பெருவிரலிலும் கொஞ்சம் தேய்த்து விடலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய், நன்றாகத் தண்ணீர் குடிப்பதுடன் உடலுக்குச் சூடு ஏற்படுத்தும் உணவுகளைக் குறைக்க வேண்டும். அதிகம் நீரேற்றம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். குழந்தை மற்றும் தாய் என இருவரும் காலை மற்றும் மாலை நேரங்களில் குளிக்க வேண்டும். இது உங்கள் உடல் சூட்டைத் தணிக்கும். மற்றும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளைத் தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
(பின் குறிப்பு: இந்தச் செய்தி ஆரோக்கியம் ரீதியாக உங்களுக்குத் தகவல்களை வழங்க மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை நீங்கள் பின்பற்றுவதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். ஈடிவி பாரத் இதை உறுதி செய்யவில்லை)
இதையும் படிங்க: சிறுநீரகத்தில் கல்லா? இந்த இலை மற்றும் இதன் வேர் சிறந்த பலன் தரும்.! - Kalluruki Remedy For Kidney Stones