தஞ்சாவூர்: கைக்குழந்தைகள் மற்றும் சிறிய குழந்தைகளுக்கு கையில் கிடைத்ததை வாயில் போடும் ஆர்வமும் பழக்கமும் இயற்கையிலேயே இருப்பதால் அதனை விழுங்குவதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு அதிகம். பெற்றோர்களால் குழந்தைகளின் ஒவ்வோர் அசைவையும் கவனிக்க முடியாத சூழல் உள்ளதால், குழந்தைகள் விளையாடும் போது என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க தவற விடுகிறோம்.
சில நேரங்களில் குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருளை வாயில் போட்டுக்கொள்வதால் உயிருக்கு ஆபத்தான சூழல் உள்ளதாக எச்சரிக்கிறார் தஞ்சையை சேர்ந்த பிரபல குழந்தைகள் நல அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் சாத்தப்பன்.
குழந்தைகள் வாயில் போடும் பொருட்களால் ஏற்படும் அபாயம் குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "குழந்தைகளில் சிலர் பெற்றோருக்கு தெரியாமல் விளையாடும் போது அவர்களின் கையில் கிடைக்கும் சாவிகள், ஊக்குகள், விசில்கள், காயின்கள், சிறிய எலக்ட்ரானிக் பேட்டரிகள், கடலை ஆகியவற்றை வாயில் போட்டு விழுங்கி விடுகின்றனர்.
அவைகள் மூச்சுக்குழாய்களிலும், நுரையீரலிலும், உணவு குழாய்களிலும் சிக்கிக்கொண்டு ஒரிரு தினங்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறது. சிறிய வகை எலக்ட்ரானிக் பேட்டரிகளில் உள்ள கெமிக்கல் குழந்தைகளின் குடலில் ஓட்டை போட்டுவிடும் அபாயம் உள்ளது.
அது போல குழந்தைகளை ஆபத்தான நிலையில் கொண்டுவரும் நிலையில் அறுவை சிகிச்சை இல்லாமல் "எண்டாஸ்கோப்பி" மூலம் அகற்றப்படுகிறது. குழந்தைகள் விளையாட அவர்களின் வாயை விட பெரிய பொருட்களையே கொடுக்க வேண்டும். சில தினங்களுக்கு முன் 10 ரூபாய் நாணயம் மற்றும் நிலக்கடலையை விழுங்கிய குழந்தைகளை ஆபத்தான நிலையில் எடுத்து வந்தனர்.
உயிருக்கு ஆபத்து: குழந்தைகள் விழுங்கிய பொருட்கள் மூச்சுக்குழாய் மூலம் நுரையீரலுக்கு சென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையை ஏற்படுத்துகிறது. அந்த குழந்தைகளுக்கு எண்டாஸ்கோப்பி மூலம் சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டது" என்றார்.
அதனை தொடர்ந்து, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் படத்துடன் விளக்கிக் கூறிய மருத்துவர், பெற்றோர்கள் குழந்தைகளின் அருகில் எலக்ட்ரானிக்ஸ் பேட்டரிகள், சாவிகள்,நாணயம் உள்ளிட்டவைகள் இல்லாதவாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்