சென்னை: "மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு" என்ற பாடல் வரிகள் கேட்பதற்கு வேண்டுமானால் குளுகுளுவென்று இருக்கலாம். கொளுத்தி எடுக்கும் கோடை வெயிலில் அய்யோ மாலா ஃபேன இந்த பக்கமா திருப்பு என்ற வடிவேலுவின் நகைச்சுவையே நினைவுக்கு வருகிறது.
வெளியே சென்று வீடு வந்தால் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் சுண்டி விட்டதுபோன்ற ஒரு உணர்வு உங்களில் பலருக்கு ஏற்பட்டிருக்கும். நாளுக்கு நாள் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உணவில் மட்டும் அல்ல உடை அணிவதிலும் கவனம் தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எப்படிப்பட்ட ஆடைகளை அணிய வேண்டும்? வெயில் காலத்தில் பருத்தி ஆடை அணிவது மட்டுமே சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆண்கள், பெண்கள் மட்டும் இன்றி வீட்டில் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பருத்தி துணியால் ஆன ஆடைகளை அணிய வேண்டும் எனவும், குறிப்பாகப் பெண்கள் காட்டன் புடவைகளைத் தேர்வு செய்வது மிகச் சிறந்தது என்றும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ஆண்கள் மற்றும் ஆண் குழந்தைகள் கட்டாயமாக உள்ளே பனியன் அணிந்த பிறகே சட்டை அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், உள்ளாடைகளை மிக இருக்கமாக அணியக்கூடாது எனவும், இரவு நேரங்களில் அவற்றைத் தவிர்ப்பது சிறந்தது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆடைகளைத் தேர்வு செய்யும்போது கருப்பு, சிவப்பு, பச்சை என அடர் நிற ஆடைகளைத் தவிர்த்துவிட்டு, வெளிர் நிற ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், இதற்கான காரணத்தையும் விளக்கிக்கூறியுள்ளனர்.
அடர் நிற ஆடைகளில் சூரிய கதிர்கள் ஊடுருவி, உடலில் உள்ள நீர்ச் சத்தை முழுமையாக உறிஞ்சி விடும் எனத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், இதனால் அதீத சோர்வு, தோல் தொடர்பான நோய்கள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர். மேலும், ஜீன்ஸ், டீ சர்ட் போன்ற இருக்கமான ஆடைகளை மக்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனக்கூறியுள்ள மருத்துவர்கள், மிகவும் லேசான, லூசான ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பருத்தி ஆடை அணிவதால் ஏற்படும் நன்மைகள்.! வெயில் காலத்திற்குப் பருத்தி ஆடைகள் ஏன் சிறந்தது தெரியுமா? பருத்தி ஆடைகள் சூரியனிடம் இருந்து ஒரு மின் கடத்தியைப்போல் செயல்பட்டு வெப்பத்தை உள்வாங்கிக்கொள்கிறது. பிறகு அதேபோல் காற்றையும் உள்வாங்கி சூட்டை வெளியேற்றுகிறது.
இதனால் நம் உடலுக்கு அதீத சூடு ஏற்படாது. அது மட்டும் இன்றி உடலிலிருந்து வெளியேறும் வியர்வையை அது முழுமையாக உறிஞ்சிக்கொண்டு உடனடியாக உலற வைக்கிறது. இதனால் தோல் தொடர்பான நோய்களில் இருந்தும் நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும்.
வெயில் காலத்தில், நீர்ச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது போல, ஆடைகளையும் தேர்வு செய்து அணியுங்கள். பாலிஸ்டர் உள்ளிட்ட பல வகை நூல்களால் ஆன ஆடைகளைத் தவிர்த்துவிட்டு, பருத்தி துணியால் ஆன வெளிர் நிற ஆடைகளைத் தேர்வு செய்து அணியுங்கள் ஆரோக்கியமான கோடை நாட்களைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: என்ன வெயிலு.. இத செஞ்சாதான் சரியா இருக்கும்.. சம்மர் டிப்ஸ்! - How To Protect From Summer Heat