சென்னை: இயற்கையை ரசிக்கும் ஓர் அற்புதமான வாய்ப்பு நமது கண்களுக்கு மட்டுமே உள்ளது. உலகத்தையே காண உதவும், நமது கண்களை பாதுகாப்பது மிகவும் முக்கியம். முன்பெல்லாம் வயதானவர்கள் தான் பவர் கண்ணாடி அணிந்திருந்தார்கள். அது கூட எப்பொழுதும் கண்ணாடி அணிவார்களா என்று கேட்டால் கிடையாது. புத்தகம் படிக்கும் போது தான் பெருமளவில் அணிந்தார்கள். ஆனால் இப்போது குழந்தைகள் கூட கண்ணாடி அணியும் நிலை வந்துவிட்டது.
முன்பெல்லாம் ஒரு குறையாக அல்லது திருமணத்திற்கு தடையாக இருந்த கண்ணாடி, இப்போது நாகரிகமாக மாறிவிட்டது. ஊட்டச்சத்து குறைபாடும், தொலைக்காட்சி, கணினி, செல்போன், ஜாய்ஸ்டிக் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை அதிகமாக உபயோகிப்பது தான் கண் பார்வை குறைபாடிற்கான காரணம் என கண் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது மட்டுமில்லாமல் மரபணு ரீதியாகவும் சில குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
கண் பார்வை குறைபாட்டை துவக்கத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் கண் பார்வை இழப்பு கூட ஏற்படலாம் என கண் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 28 கோடியே 50 இலட்சம் பேர் கண் பார்வை குறைபாடு உள்ளவர்களாகவும், அதில் 3 கோடியே 90 இலட்சம் பேர் பார்வை இழந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஒரு நிமிடத்திற்கு ஒரு குழந்தை பார்வை திறன் இழப்பதாகவும் கூறியுள்ளது. வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகளே கண் பார்வை இழப்பால் அதிகமாக பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆகவே, ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளின் கண் பார்வையில் அக்கறை கொள்ள வேண்டும். சிறு வயதில் என்ன கண் பார்வை பிரச்சினை ஏற்பட்டு விடப்போகிறது என கவனக்குறைவாக இருக்கக்கூடாது.
உங்கள் குழந்தைகளின் சிறு சிறு நடவடிக்கைகளையும் கண்காணித்து, அவர்களுக்கு என்ன தேவை என்பதை செய்து கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தை கண் பார்வை பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய யுனிசெஃப் அமைப்பு (United Nations Children's Fund) சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
உங்கள் குழந்தை பல நேரங்களில் ஒரு பொருளை வெகு நேரம் கூர்ந்து கவனித்தால் அவர்களுக்கு கண் பார்வை தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம் என ஆல் அபோட் விஷன் (All About Vision) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- உங்கள் பிள்ளைகள் வயது வளர்ந்தும், ஒரு பத்தியை வாசிக்கும் போது, சுட்டி காட்டி வாசிக்கின்றனர் என்றால், அவர்கள் பார்வை தொடர்பான பிரச்சினையை கொண்டிருக்கலாம். இது போன்ற செயல்களில் உங்கள் குழந்தை ஈடுபட்டிருந்தால், கண் மருத்துவரை அணுக வேண்டும்.
- பல நேரங்களில் குழந்தைகள் தலைவலி, தலைச்சுற்றல் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் எனில் அவர்களும் கண் தொடர்பான பிரச்சினைகளை கொண்டிருக்கலாம்.
- உங்கள் குழந்தை தொலைக்காட்சி, தொலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பயன்படுத்தும் போது, அதை கூர்ந்து கவனித்தாலோ அல்லது கண்களை சுருக்கி பார்த்தாலோ, அவர்கள் கண் தொடர்பான பிரச்சினைகளை கொண்டிருக்கலாம்.
- உங்கள் குழந்தைகள் அடிக்கடி கண்களை தேய்க்கும் பழக்கத்தைக்கொண்டிருந்தாலோ, உங்கள் குழந்தையின் கண்களில் இருந்து அடிக்கடி நீர் வடிதல் ஏற்பட்டாலோ கண் மருத்துவரை அணுகுவது நல்லது.
பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளின் கண் பிரச்சினை தொடர்பான அறிகுறிகளை கவனிக்க தவறுகின்றனர். இதனால் பெரும்பாலான குழந்தைகள் கண் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். ஆகவே யுனிசெஃப் அமைப்பு கூறிய மேற்கூறிய பிரச்சினைகளை உங்கள் குழந்தைகள் எதிர்கொண்டால் அவர்களை கண் மருத்துவரிடம் அழைத்து சென்று கண் பரிசோதனை மேற்கொள்வது இன்றியமையாதது.
இதையும் படிங்க: குண்டான குழந்தையின் பெற்றோரா நீங்கள்? யூனிசெஃப் சொல்லும் ஆரோக்கிய வாழ்வுக்கான வழி! - CHILDREN OBESITY UNICEF Guidelines