ஹைதராபாத்: பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப நமது சருமத்தில் மாற்றங்கள் ஏற்படுவதும் இயல்பு தான். அந்த வகையில் குளிர்காலத்தில் சரும வறட்சி, உதடு வெடித்தல், பாதங்களில் பித்தவெடிப்பு போன்ற சரும பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, குளிர்கால வறட்சியிலிருந்து சருமத்தை எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்து இதில் காணலாம்.
காலநிலை குளிர்ச்சியாகவும், ஈரப்பதம் குறைவாகவும் இருக்கும் போது, நமது சருமம் வறண்டு போகும். மேலும், அடிக்கடி குளிப்பது, கடுமையான சோப்புகளை பயன்படுத்துதல், சில வகையான சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றாலும் சருமம் வறண்டு போகும்.
வறண்ட சரும பிரச்சனையை குறைக்க மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்த வேண்டும். அவை சருமத்தை ஈரப்பதத்துடனும், மாய்ஸ்சரைசர்களில் உள்ள சில பொருட்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதாக அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங்கில் தலைமை மருத்துவ ஆசிரியராகப் பணிபுரியும் டாக்டர் ஹோவர்ட் இ. லெவின் தெரிவித்துள்ளார்.
சருமத்தை பாதுகாக்க டிப்ஸ்:
- குளிர்காலத்தில் உங்கள் வீட்டில் ஈரப்பதமூட்டியை (Humidifier) பயன்படுத்த மறக்காதீர்கள். இது வறண்ட காற்றில் ஈரப்பதத்தைச் சேர்ப்பதால், குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்கிறது.
- குளிர்காலத்தில் சிலர் வெந்நீரில் குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது சருமத்தை மிகவும் வறண்டு போக செய்கிறது.
- நீண்ட நேரம் குளிப்பதை தவிர்த்து 5 முதல் 10 நிமிடங்களுக்கும் குளித்து விடுங்கள்
- குளிர்காலத்தில் வெந்நீரை உடலில் ஊற்ற ஊற்ற சுகமாக இருந்தாலும், அதனை முற்றிலுமாக தவிர்த்து வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும்.
- நாம் குளிப்பதற்கு பயன்படுத்தும் சில சோப்புகளும் சருமத்தை வறண்டு போக செய்கிறது. அதனால், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க கிளிசரின் மற்றும் மாய்சுரைசர் கொண்ட சோப்புகளை பயன்படுத்த வேண்டும்.
- சிலர், குளிக்கும்போது லூஃபாக்கள் மற்றும் நார் போன்றவற்றை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது சருமத்தை கடுமையான வறட்சிக்கு உள்ளாக்குவதால் அதனை தவிர்ப்பது நல்லது.
- குளித்ததும் உடலில் துண்டை வைத்து தேய்க்க வேண்டாம். காட்டன் போன்ற மென்மையான துண்டை பயன்படுத்தி உடலை உலர்த்துங்கள்.
- குளித்தவுடன் அல்லது கைகளைக் கழுவிய உடனேயே மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சருமம் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்கிறது.
- சருமம் படு மோசமாக வறண்டு போய் இருப்பதாக உணர்ந்தால், பெட்ரோலியம் கெல்லை தடவவும். இது சருமத்தை மென்மையாக்குவதுடன் அரிப்புகளையும் குறைக்கிறது.
- சருமத்தை எரிச்சலூட்டும் கம்பளி அல்லது மற்ற வகை ஆடைகளை உடுத்த வேண்டாம்
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்