ஹைதராபாத்: சாம்பார் சாதம், தயிர் சாதம், புதினா சாதம், லெமன் சாதம் என பல வெரைட்டி சாதங்களை நாம் சாப்பிட்டு இருப்போம். ஆனால், திருநெல்வேலி சுற்றுவட்டாரத்தில் செய்யப்படும் உளுந்து சாதத்தை நீங்கள் ருசித்தது உண்டா? இதை, உளுந்தஞ் சோறும் என்று சொல்வார்கள்.
சுவையும் சத்தும் கொட்டிக்கிடக்கும் இந்த உளுந்து சாதத்தை காலை, மதியம், இரவு என எப்போது வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம். உடல் எலும்பு வலிமையாக இருக்க உளுந்து சாதம் எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- அரிசி - 2 கப்
- உடைத்த கருப்பு உளுந்து - 1/2 கப்
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- பூண்டு - 10 பற்கள்
- துருவிய தேங்காய் - 1/2 கப்
- உப்பு - தேவையான அளவு
உளுந்து சோறு செய்முறை:
- முதலில், ஒரு வாணலியில் உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
[குறிப்பு: வறுத்து வைத்துள்ள உளுந்து மற்றும் அரிசியை ஒரு பாத்திரத்தில் 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து விடுங்கள்]
- பின்னர், ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அரிசி எடுத்த கப்பில் இரண்டு கப் மற்றும் உளுந்து எடுத்த கப்பில் இரண்டு கப் தண்ணீரை ஊற்றுங்கள்.
- இப்போது, அந்த தண்ணீரில் பூண்டை சேர்த்து கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும், ஊற வைத்துள்ள அரிசி மற்றும் உளுந்தை குக்கரில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
- அதன் கூடவே, வெந்தயம் மற்றும் சீரகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். கடைசியாக, துருவி வைத்துள்ள தேங்காய்யை சேர்த்து கரண்டியால் கலந்து விடுங்கள்.
- இப்போது, குக்கரை மூடி மிதமான தீயில் 5 நிமிடத்திற்கு வேக விடுங்கள். நன்றாக வெப்பம் அடங்கியதும் குக்கரை திறந்தால் சுவையான மற்றும் சத்தான உளுந்து சாதம் ரெடி.
[குறிப்பு: கொதித்த தண்ணீரில் அரிசி மற்றும் உளுந்தை நாம் சேர்ப்பதால் 5 நிமிடங்களுக்கு வேக வைத்தால் போதுமானது]
தேங்காய், எள்ளுத் துவையல், புளிக்குழப்பு உள்ளிட்டவைகளை உளுத்து சாதத்திற்கு சைட் டிஷ்களாக பயன்படுத்தலாம். கூடுதலாக, சாப்பிடும் போது உளுந்து சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள்.
உளுந்து பயன்கள்:
- செரிமானத்தை மேம்படுத்துகிறது
- ஆற்றலை அதிகரிக்கிறது
- எலும்பு வலிமையாகிறது
- சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது
- கூந்தலுக்கு நல்லது
- இதய ஆரோக்கியம்