சென்னை: பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப நமது சருமத்தில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பே. அந்த வகையில், கோடைக்காலம் என்றால் தோல் சுருக்கங்கள், சருமம் கருத்தல், முகப்பருக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வருவதைப் போன்று குளிர்காலத்திலும் சரும வறட்சி, உதடு வெடித்தல், பாதங்களில் பித்தவெடிப்பு போன்ற சரும பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, குளிர்கால வறட்சியிலிருந்து சருமத்தை எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்து இதில் காணலாம்.
குளிர்காலம் வந்தவுடன் நமது சருமத்தில் இருக்கும் இயற்கையான ஈரப்பதமானது குறைந்துவிடுகிறது. ஏனெனில், குளிர்ந்த காற்று, குறைவான ஈரப்பதம் மற்றும் உட்புற வெப்பமாக்கல் இவை அனைத்தும், மனித உடலில் இருக்கும் இயற்கை ஈரப்பதத்தைக் குறைத்து உலர்ந்த மற்றும் இறுக்கமான சருமத்தை உருவாக்குகின்றன. இதனைச் சரிவர கவனிக்காவிடில் தோல் உரிதல், அரிப்பு உள்ளிட்ட பல சரும பிரச்னைகளுக்கு இது வழிவகுக்கும்.
குளிர்கால சரும வறட்சியில் இருந்து தப்பிக்க எளிய டிப்ஸ்:
- சூடான நீரில் குளியலைத் தவிர்த்தல்: குளிர்காலம் தொடங்கிய மறுகணமே நமது உடல் வெதுவெதுப்பான நீரைத் தேடத் துவங்குகிறது. குளிக்கவோ, குடிக்கவோ முதலில் தேர்ந்தெடுப்பது சூடான நீரைத் தான். ஆனால், இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பது பற்றி எவரும் யோசிப்பதில்லை. சூடான நீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெயை அகற்றி, ஈரப்பத இழப்பு மற்றும் வறட்சியை அதிகரிக்கிறது. ஆகையால், குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீரைக் குளியலுக்கு பயன்படுத்தும் போது, உடலில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தினை இழக்காமல் இருக்க, குளிக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள்.
- மாய்ஸ்சரைசர் பயன்பாடு: வறண்ட சருமத்திலிருந்து காத்துக் கொள்ள மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது அவசியம். இது சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்கப் பெரிதும் உதவுகிறது. ஆகையால் குளித்த மறுகணமே முகம் மற்றும் சருமம் முழுவதும் மாய்ஸ்டரைசரை தடவ வேண்டும். அதோடு தூங்குவதற்கு முன் சருமத்தில் மாய்ஸ்டரைசரை பயன்படுத்துவது கூடுதலாக சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
- சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுதல்: சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் அகற்றப்படாமல் இருப்பதன் மூலம் அது சருமத்திற்குள்ளேயே தங்கி சருமத்தைச் சுவாசிக்க விடாமல் செய்கின்றது. எனவே, சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு எக்ஸ்ஃபோலியேட் செய்வது அவசியம். இருப்பினும், மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டரைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். ஏனெனில், குளிர்காலத்தில் தோல் அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கும். ஆகையால், சாலிசிலிக் அமிலம் போன்ற ரசாயன எக்ஸ்ஃபோலியேட்டை பயன்படுத்துங்கள்.
- வீட்டை ஈரப்பதமாக வைத்தல்: வீட்டில் இருக்கும் உட்புற வெப்பம் வறண்ட காற்றுக்கு வழிவகுக்கிறது. இது சருமத்தின் நீரிழப்பை அதிகரிக்கிறது. ஆகையால், வீட்டிற்குள் காற்றின் ஈரப்பதத்தை மீட்டெடுக்க ஈரப்பதமூட்டியை (Humidifier) பயன்படுத்துங்கள். இது சரும வறட்சியைத் தடுத்து, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
- மோசமான வானிலையிலிருந்து சருமத்தைப் பாதுகாத்தல்: குளிர்காலத்தில் வெளியில் செல்லும்போது, குளிர்ந்த காற்று மற்றும் குறைந்த ஈரப்பதத்திலிருந்து முகம், தலை மற்றும் கைகளைப் பாதுகாக்க ஸ்கார்ஃப், தொப்பி மற்றும் கையுறைகளை அணிவது அவசியம். மேலும், வறட்சி காரணமாக உதடுகளில் விரிசல் ஏற்படுவதைத் தடுக்க ஈரப்பத மூட்டும் லிப் பாமைப் பயன்படுத்துங்கள்.
- அகத்திலும் அதிக கவனம் தேவை: குளிர்கால வறட்சியைத் தடுக்க உடலின் வெளிப்புறத்தில் காட்டும் அதே அக்கறை மற்றும் கவனத்தை, உட்புறத்திலும் காட்டுவது அவசியம். அதாவது, கோடைக் காலத்தைப் போன்று குளிர்காலத்தில் அதிக தாகம் ஏற்படாது. ஆகையால், நாம் போதிய நீரை அருந்துவது இல்லை. இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு, சருமம் வறட்சி அடைகிறது. எனவே தாகம் இல்லை என்றாலும், உடலுக்குத் தேவையான நீரை அருந்த வேண்டும். இதன் காரணமாக சருமம் ஊட்டம் பெரும்.
- சீரான உணவு அவசியம்: பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சீரான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து, தோல் ஆரோக்கியத்தில் பெரும் பங்காற்றுகிறது. மீன், ஆளிவிதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட உணவுகள் மற்றும் திராட்சை, அவகேடோ, கேரட், பூசணி, மிளகு, வெள்ளரிக்காய் போன்ற வைட்டமின் A,C மற்றும் E நிறைந்த காய்கறி, பழங்களைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இனி சரும வறட்சி எந்த காலத்திலும் நெருங்காது.
இதையும் படிங்க: இரவில் சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன? அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்..!