ஹைதராபாத்: வெறிநாய் கடித்தால் பரவும் வைரஸ் நோய் தான் ரேபிஸ். ரேபிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்நோயை முறியடிப்பதில் முன்னேற்றம் காணவும், ஆண்டுதோறும் செப்டம்பர் 28ஆம் தேதி உலக ரேபிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று 18வது உலக ரேபிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ரேபிஸ் நோய்க்கான முதல் தடுப்பூசியை கண்டுபிடித்த பிரஞ்சு வேதியலாளரும், நுண்ணுயிரியலாளருமான லூயிஸ் பாஸ்டர் இறந்த செப்டம்பர் 28ஆம் தேதி உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார அமைப்பு (WHO - World Health Organization) மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO - Food and Agriculture Organization) போன்றவை ரேபிஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் தடுப்பு முயற்சிகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தாண்டு கருப்பொருள்: ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு கருப்பொருள் அடிப்படையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டின் கருப்பொருள் “ரேபிஸ் எல்லைகளை உடைத்தல்” (Breaking Rabies Boundaries) என்பதாகும். எல்லைகளை உடைப்பதன் மூலம் புவியியல், சமூக பொருளாதார மற்றும் கல்வி தடைகளை நாம் கடக்க முடியும்.
தடுப்பூசி, விழிப்புணர்வு மற்றும் மருத்துவ சேவைக்கான அணுகலை உறுதி செய்ய முடியும். அதன் படி அரசாங்கம், சுகாதார நிறுவனங்கள், கால்நடை சேவைகள் மற்றும் சமூகங்களை ஒன்றிணைத்து எல்லை தாண்டிய ஒத்துழைப்புகளின் அவசியத்தை இந்த கருப்பொருள் உணர்த்துகிறது.
ரேபிஸ் பாதிப்பு: உலக அளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆண்டுதோறும் 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரேபிஸ் நோயால் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் ரேபிஸ் நோயால் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
2005 மற்றும் 2020க்கு இடையில் இந்தியாவில் ரேபிஸ் பாதிப்பு 10 மில்லியன் மக்களுக்கு 2.36இல் இருந்து 0.41 ஆக குறைந்துள்ளதாக தேசிய சுகாதார விவரம் National Health Profile (NHP) தெரிவித்துள்ளது. மேலும் 2022இல் இந்தியாவில் 301 பேர் ரேபிஸால் இறந்துள்ளனர். டெல்லி, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஜூலை 30, 2024 நிலவரப்படி 2023இல் 286 பேர் வெறிநாய் கடியால் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: இதனால்தான் வளர்ப்பு நாய்கள் கூட மனிதர்களை கடிக்கிறதா, நாய் கடியிலிருந்து தப்பிக்க வழிகள் என்ன? - மருத்துவர் கூறும் விளக்கம்!
ரேபிஸ் நோய்: ரேபிஸ் என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட பாலூட்டிகளின் மைய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு வைரஸ் நோய் ஆகும். பாதிக்கப்பட்ட விலங்கு கடிப்பதாலும் அல்லது கீறுவதாலும் இந்நோய் பரவுகிறது. ரேபிஸ் வைரஸ் நரம்பு மண்டலத்தின் வழியாக மூளைக்கு செல்கிறது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவாதம் மற்றும் கடுமையான நரம்பியல் அறிகுறிகள் ஏற்பட வழிவகுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.
வெறிநாய்க்கடி அல்லது ரேபிஸ் நோய் மிகவும் ஆபத்தானது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். வெறிநாய் கடிக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி மற்றும் காயம் ஏற்பட்ட இடத்தில் முறையான பராமரிப்பு வழங்குதல் ஆகியவற்றின் மூலம் இந்நோயை முற்றிலுமாக தடுக்க முடியும்.
ரேபிஸ் நோய் அறிகுறிகள்: ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, உடல் பலவீனம், அசௌகரிகம், நாய் கடித்த இடத்தில் கூச்ச உணர்வு மற்றும் அதில் முட்கள் அல்லது அர்ப்பு உணர்வு போன்றவை ஏற்படும். மேலே கூறப்பட்ட அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்குள் தோன்றும். அதன் பின் பதற்றம், தூக்கமின்மை, குழப்பம், மயக்கம், மாயத்தோற்றம், வலிப்பு, ஹைட்ரோபோபியா அதாவது தண்ணீரை கண்டால் பயம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும்.
பாரலிடிக் ரேபிஸ் (Paralytic rabies): மேலும் 20 சதவீதம் பேருக்கு பாரலிடிக் ரேபிஸ் (Paralytic rabies) ஏற்படுகிறது. இது சற்று வேறுபட்ட அறிகுறிகளை கொண்டுள்ளது. பாரலிடிக் ரேபிஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாய் கடித்த இடத்தில் இருந்து தசைகள் செயலிழக்கும். கோமா ஏற்பட்டு இறுதியில் மரணம் நேரிடும். பாரலிடிக் ரேபிஸ் நீண்ட கால நோயாகும்.
ரேபிஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள்:
- ரேபிஸ் நோய் தடுப்பதற்கு முதலில் வீடுகளில் வளர்க்கும் நாய் மற்றும் பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசியை போட வேண்டும்.
- செல்லப்பிராணிகளை காட்டு விலங்குகள் அல்லது அறிமுகமில்லாத பிராணிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- விலங்குகள் கடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
- ரேபிஸ் பற்றி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- மருத்துவமனைகளில் தடுப்பூசி விகிதங்களை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் ரேபிஸ் நோயை தடுக்கலாம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்