சென்னை: சைபர் க்னைஃப் S7 சிஸ்டம் மூலம் ஸ்டீரியோடாக்டிக் ரேடியோ சர்ஜரி (SRS), ஸ்டீரியோடாக்டிக் பாடி ரேடியோதெரபி (SBRT) மற்றும் ஹைபோஃப்ராக்ஷனேட்டட் ரேடியோதெரபி சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொள்வதற்கான பயிற்சி மையங்களை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அமைத்துள்ளது. இதன் நிகழ்ச்சி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பின் ஈடிவி பாரத்திற்கு பேட்டி அளித்த அம்மருத்துவமனையின் புற்றுநோயியலுக்கான கதிரியக்க சிகிச்சை துறையின் மருத்துவர் ரத்னாதேவி, சைபர்நைப் எஸ் 7 சிஸ்டம் மூலம் புற்றுநோய் கட்டி உள்ள நபருக்கு ரோபோட்டிக் ஸ்டீரியோடாக்டிக் கதிரியக்க சிகிச்சையை மிக துல்லியமாக வழங்க முடியும் எனக்கூறினார்.
இதற்கு நிகழ் நேர இமேஜிங் என்ற சிறந்த டெக்னாலஜி இருப்பதால், கட்டி எந்த இக்கட்டான இடத்தில் இருந்தாலும் அதை கண்டறிந்து அதற்கு தீர்வுகாண முடியும் எனவும் அவர் கூறினார். சாதரண கதிர்வீச்சு சிகிச்சை வழங்கும்போது நோயாளியின் உடலில் உள்ள மற்ற செல்கள் அல்லது உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் சூழலில், இந்த உயர் கதிர்வீச்சு சிகிச்சை புற்று கட்டி மற்றும் புற்று கட்டி அல்லாத கட்டியை எளிமையாக நெருங்கி சிகிச்சை அளிக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்த சிகிச்சை "லஞ்ச் டைம்" சிகிச்சை என்ற அளவுக்கு அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்து உள்ளிட்ட எதுவும் இன்றி வெளிநோயாளியாக கருதப்பட்டு சிகிச்சை வழங்கப்படும் எனவும் கூறினார். ஆனால் இந்த சிகிச்சை அனைத்து புற்றுநோயாளிகளுக்கும் பொருந்தாது என குறிப்பிட்ட மருத்துவர் ரத்னாதேவி, புற்று நோய் உடல் முழுவதும் பரவி இருந்தால் இந்த சிகிச்சைக்கு மாற்று சிகிச்சைதான் பெற வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், ரோபோட்டிக் ஸ்டீரியோடாக்டிக் கதிரியக்க சிகிச்சை மூலம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சிகிச்சை வழங்க முடியும் எனவும், எவ்வளவுக்கு எவ்வளவு நோயாளிக்கு எளிமையான வகையில் சிகிச்சைகள் மாற்றி அமைக்கப்படுகிறதோ அதன் சவால்களை மருத்துவர்கள் எதிர்கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டியது உள்ளது எனவும் விளக்கம் அளித்தார். இந்த சிகிச்சை பெற ஆரம்பகட்டத்தில் இருந்து 3.50 லட்சம் முதல் 5 மற்றும் 6 லட்சம் வரை செலவாகலாம் எனவும் மருத்துவர் ரத்னாதேவி குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: அடிக்கடி வலி நிவாரணி மாத்திரை உட்கொள்பவரா நீங்கள்? இதைக் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்.! - Pain Killers are they safe or not