ஹைதராபாத்: தலையில் கையை வைத்தாலே முடி வேரோடு வருகிறதா? அதற்கு, தூக்கமின்மை, மனஅழுத்தம், மாசு போன்றவை காரணங்களாக இருக்கலாம். சிலருக்கு பரம்பரை வழியாகவும், ஹார்மோன் பிரச்சனை காரணமாகவும் முடி உதிர்கிறது.
இவை அனைத்திற்கும் மேலாக, உங்கள் உடலில் உள்ள 'வைட்டமின் டி' குறைபாடும் முடி பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். முடி பிரச்சனைகளை தடுக்க, உடலில் வைட்டமின் டி அளவு குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம் என்கின்றனர். குறிப்பாக, வைட்டமின் டி குறைபாடு முடி உதிர்தல் மற்றும் அலோபீசியாவிற்கு (சொட்டை/வழுக்கை) வழிவகுக்கிறது என ஒரு தேசிய மருத்துவ நூலக அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் அண்ட் எஸ்தெடிக் டெர்மட்டாலஜியில், 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வில், வைட்டமின் டி எடுத்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்கும் பெண்கள் மத்தியில் முடி வளர்ச்சி மேம்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
வைட்டமின் டி நிறைந்த உணவுகள்:
மீன்: கானாங்கெளுத்தி, மத்தி, சால்மன், டுனா போன்ற மீன் வகைகளில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாது, மீன்களில் உள்ள கால்சியம், புரதம், பாஸ்பரஸ் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கின்றது.
காளான்: வைட்டமின் டி அளவு காளானில் அதிகம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது தவிர, வைட்டமின் பி 1,2,5 போன்ற சத்துக்களையும் காளான் கொண்டுள்ளதால், இவற்றை தினமும் உட்கொள்வதவன் மூலம் நல்ல பலனைத் பெற முடியும்.
பால் மற்றும் தயிர்: உடலுக்கு தேவையான வைட்டமின் டி-ஐ வழங்க பால் மற்றும் தயிர் உதவியாக இருக்கிறது. இவற்றில் உள்ள புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கிறது.
ஆரஞ்சு பழம்: ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி மற்றும் டி நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து முடி உதிர்வு பிரச்சனைகளை வராமல் தடுக்கின்றது. இது தவிர, முட்டையின் மஞ்சள் கரு, தானியங்கள், சீஸ், சோயா பால், ஓட்ஸ் ஆகியவற்றிலும் வைட்டமின் டி நிறைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இப்படி, தினமும் வைட்டமின் டி உள்ள உணவுகளை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமும் தினமும் காலையில் குறைந்தது பதினைந்து நிமிடங்களாவது சூரிய ஒளியில் வேலை அல்லது நிற்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு போதுமான வைட்டமின் டி கிடைக்கும் என்கிறார்கள்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.