இன்றைய காலத்தில் பிபி இல்லாதவர்களே இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. மாறிய வாழ்க்கை முறை, உணவு முறை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற காரணங்களால் பிபி பிரச்சனை ஏற்படுகிறது. வயது வித்தியாசமின்றி இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், பலர் தங்களுக்கு இரத்த அழுத்தம் (Blood Pressure) இருப்பது தெரியாமல் இருக்கின்றனர். எனவே ஒவ்வொருவரும் அடிக்கடி தங்களது பிபியை தவறாமல் பரிசோதித்துக்கொள்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
அலட்சியத்தால் பிபி அதிகரிப்பு?: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் நடத்திய ஆய்வில், இரத்த அழுத்தத்தை அளவிடும்போது நாம் செய்யும் சில தவறுகளால், பிபி அளவீடுகள் சராசரியாக 6.5 புள்ளிகள் அதிகரிக்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. அப்படியானால், பிபி செக் செய்யும் போது செய்யக்கூடாத தவறுகள் என்ன? என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? என்பதை பற்றி பார்ப்போம்.
இரத்த அழுத்தப் பரிசோதனை செய்யும்போது, சுற்றுப்பட்டை சரியாக கையைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளதா என்பதை இருமுறை சரிபார்க்கவும். இல்லையெனில், இரத்த அழுத்த அளவீடுகள் தவறாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல், ரத்த அழுத்தத்தை அளவிடும் போது கையை இதயம் இருக்கும் உயரத்தில் வைத்திருப்பது முக்கியம் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் நடத்திய ஆய்வில் பங்கேற்ற டாக்டர் கென்னத் வாங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிபியால் அவதிப்படுகிறீர்களா? செம்பருத்தி "டீ" குடித்தால் போதும் பிராப்ளம் சால்வ்..ஆய்வு கூறுவது என்ன?
மேலும், கையை மடியில் வைத்திருப்பது, கைக்குக் கீழே கை வைக்காமல் இருப்பது, கையை கீழே தொங்கவிடுவது போன்ற தவறுகளால் பிபி ரீடிங்கில் சராசரியாக 6.5 புள்ளிகள் மாற்றங்கள் ஏற்படும். எனவே இரத்த அழுத்தப் பரிசோதனையை மேற்கொள்ளும்போது சரியாக உட்காரவும். மேலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
முன்னெச்சரிக்கைகள் அவசியம்!
- முதலில், BP சாதனத்தில் உள்ள சுற்றுப்பட்டையை அணியும் போது உங்கள் கைக்கு, அந்த பட்டை சரியான அளவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள். ஆடைக்கு மேல் சுற்றுப்பட்டையை அணிவதை தவிர்க்கவும்.
- உட்காரும் நிலை சரியாக இருக்க வேண்டும். குறிப்பாக, பாதங்கள் தரையை தொட வேண்டும். நாற்காலியில் நிமிர்ந்து உட்காருங்கள், கோணலாக உட்காந்திருக்க கூடாது.
- எந்த கையில் பிபி பரிசோதனை செய்யப்படுகிறதோ அந்த கையை இதயம் இருக்கும் அளவில் உயர்த்தி வைக்கவும். பரிசோதனையின் போது மோஜை மீது கையை வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது.
- இரத்த அழுத்தத்தை அளவிடும் போதும், முன்னரும் பேசுவதை தவிர்க்க வேண்டும். யாரிடமாவது போசும் போது அல்லது பதட்டமாக உணரும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, பரிசோதனைக்கு முன் குறைந்தது 5 நிமிடங்களாவது அமைதியாக உட்காருமாறு பரிந்துரைக்கின்றனர்.
இதையும் படிங்க: உங்களுக்கு Low Bp-ஆ?..உடனே சரி செய்ய 5 உணவுகள் இதோ - மருத்துவர் பரிந்துரை!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்