ஐதராபாத்: டெங்கு பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு தட்டணுக்குள் (Platelet) வீழ்ச்சி அடைவது அனைவரும் அறிந்தது என்றாலும் தற்போது ஏற்படும் பிளாஸ்மா கசிவு (Plasma Leakage) உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஐதராபாத்தில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காய்ச்சல் என மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் 10 நபர்களில் 3 முதல் 4 நபருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகிறது.
டெங்கு பாதிப்பு காரணமாகப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை சதவீதம் 15 முதல் 25 சதவீதம் குறைந்துள்ளதாக தெலங்கானா பத்திரிக்கை ஒன்று தரவுகளை வெளியிட்டுள்ளது. மேலும், காந்தி, உஸ்மானியா, நிலோபர் மருத்துவமனைகளில் டெங்குகாய்ச்சல் பாதிப்பால் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு பிளாஸ்மா கசிவு ஏற்படுவதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். டெங்கு வைரஸ் இரத்த நாளங்களின் எண்டோடெலியம் புறணியைப் பாதிக்கும்போது, அவை வீக்கமடைந்து அவற்றுக்கிடையே இடைவெளிகள் உருவாகின்றன. இதன் விளைவாக இரத்தத்தில் பிளாஸ்மா கசிவு ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
பிளாஸ்மா கசிவு அறிகுறிகள்:
- கால்கள் மற்றும் கண்களைச் சுற்றி வீக்கம்
- இரத்தத்தில் ஹீமாடோக்ரிட்(hematocrit) அளவு அதிகரிப்பது (சிவப்பு இரத்த அணுக்களைக் குறிக்கிறது)
- இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் குறைவது
- கை, கால்களில் குளிர்ச்சி
- வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி
இந்த அறிகுறிகளைக் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதனைக் கண்டுகொள்ளாமல் விடுவதன் மூலம் வைரல் ரத்தக்கசிவு காய்ச்சல் (hemorrhagic shock syndrome) அபாயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்துவதாக எச்சரிக்கிறார் மருத்துவர் ராஜா ராவ்.
டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் அச்சமடையத் தேவையில்லை எனக்கூறும் மருத்துவர், இதனைக் கண்டுகொள்ளாமல் விடுவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். டெங்குவை குணப்படுத்த மருந்துகள் ஏதும் இல்லை என்றாலும், பாராசிட்டமால் (paracetamol) மற்றும் நீர் ஆகாரங்களை உட்கொள்வது மூலம் பாதுகாப்பாக இருக்கலாம் என்கிறார்.
டெங்கு பாதிப்பு கண்டறியப்படுபவர்களில் 10% பேருக்கு ப்ளாஸ்மா கசிவு ஏற்படுவதாக மருத்துவர் குறிப்பிடுகிறார். எனவே, மேல் கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவச் சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என்கிறார்.
டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: நீர் தேங்கி இருக்கும் இடங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதால் நீர்த் தேக்கம் உள்ள இடங்களைத் தவிர்க்கவும். வீட்டில் கொசு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும். காய்ச்சி வடிகட்டிய தண்ணீரைக் குடிக்கவும், ஃபிரிட்ஜில் சேமித்து வைத்திருக்கும் உணவுகளை உண்ணக்கூடாது எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், காய்ச்சல், இருமல், தும்மல் மற்றும் சோர்வாக உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.