உலக பார்வை தினம் வரலாறு: பார்வை குறைபாடு மற்றும் பார்வை இழப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச குருட்டுத்தன்மை தடுப்பு நிறுவனம் (IAPB) ஆகியவற்றால் 1998ல் உலக பார்வை தினம் (World Sight Day) நிறுவப்பட்டது. அதன் பின்னர், உலகளவில் பல்வேறு நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் கண் பராமரிப்பு நிபுணர்களால் இந்த தினம் ஆதரிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை, நமது கண்கள் மற்றும் பார்வையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் பராமரிப்பை மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
2024ன் தீம்?: நமது வருங்கால சந்ததியரின் பார்வையை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை முன்னிருத்தி 'குழந்தைகளே, உங்கள் கண்களை நேசிக்கவும்' (Children, love your eyes) என்பதை இந்த ஆண்டிற்கான தீம்மாக அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.
SPECS 2030: இந்த முறை WHO, குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தியுள்ளது. கண் சம்பந்தப்பட்ட சேவைகள் அனைத்தும் குழந்தைகள் அணுகக்கூடியதாகவும், கிடைக்கக்கூடியதாகவும் மற்றும் மலிவு விலையில் கிடைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யாமல் விடுவதால், கல்வி மற்றும் சமூக பிரச்சனைகளை பலரும் சந்திக்கின்றனர். இதற்கு கண்ணாடி, சிகிச்சை போன்ற எளிய முறைகள் தீர்வுகளாக அமைகின்றனர். அந்த வகையில், WHO உலகளாவிய SPECS 2030 முன்முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தேவைப்படும் அனைவருக்கும் தரமான, மலிவு விலையில் கண்ணாடிகள் மற்றும் தொடர்புடைய மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை அணுகுவதை உறுதி செய்கிறது.
கண் ஆரோக்கியம் ஏன் முக்கியம்?:
- உலகளவில் 43 மில்லியன் மக்கள் பார்வையற்றவர்களாகவும்,295 மில்லியன் பேர் பல்வேறு பார்வை குறைபாட்டுடன் வாழ்கின்றனர். இவற்றில், 77 சதவீத பிரச்சனைகளை முற்றிலுமாக தடுத்து அல்லது சிகிச்சையளிக்கக்கூடியதாக இருக்கிறது.
- சுமார் 1 பில்லியன் மக்கள் பார்வை இழப்புடன் வாழ்கின்றனர்
- 100 மில்லியன் மக்கள் கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை 20 நிமிட அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
- 90 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் பார்வை குறைப்பாட்டுடன் வாழ்கின்றனர். இதில், 2 மில்லியன் குழந்தைகள் பார்வையற்றவர்கள்
கண் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் சில:
- ஆண்கள் மத்தியில் நிறக்குருடுத்தன்மை (Color Blindness) அதிகமாக உள்ளது
- ஒரு பின்ஹோல் கேமரா எப்படி தலைகீழான படத்தை உருவாக்குகிறதோ, அது போல உலகை நாம் உண்மையில் தலைகீழாகப் பார்க்கிறோம். படத்தைச் செயலாக்குவதற்கும், தலைகீழாக்குவதற்கும் நமது கண்களுடம் மூளை நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளது
- அனைத்து குழந்தைகளும் நிறக்குருடுகளாக தான் பிறக்கின்றன. பிறந்த சில வாரங்களுக்குப் பிறகே குழந்தைகளால் நிறத்தை வேறுபடுத்த முடிகிறது மற்றும் 6 மாதங்களுக்குள் குழந்தைகள் நிறத்தை முழுமையாக உணர முடியும்
- மனித உடலின் வேகமான தசைகளில் ஒன்று ஆர்பிகுலரிஸ் ஓகுலி, இது கண்ணில் உள்ளது. இந்த தசைகள் தான் கண் இமைகள் மூடும் செயலுக்கு, அதாவது கண் சிமிட்டலுக்கு பொறுப்பாகிறது.
- கண் பரிசோதனை அல்லது பார்வைப் பரிசோதனை மூலம் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்களைக் கண்டறியலாம்.
- கண்ணின் முன்பக்கத்தில் உள்ள வெளிப்படையான படலமான கார்னியா, உடலில் இரத்த நாளங்கள் இல்லாத ஒரே திசு ஆகும்
இதையும் படிங்க: PresVu Eye Drops: 15 நிமிடத்தில் நல்ல பார்வைத் திறன் - சாதனை கண் மருந்தும், தொடர் சர்ச்சைகளும்!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்