சென்னை: மக்கள் தங்கள் உடலின் பாகங்களான முகம் மற்றும் கைகளை தங்களின் சொந்த பகுதிகளைப் போலவே கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் பாதங்களை பெரும்பாலும் புறக்கணித்து விடுகிறார்கள் என்று பாத மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். தினமும் காலை மற்றும் இரவு என இரு வேளையும் பல் துலக்குவதைப் போல தினமும் இரு வேளை, அதாவது தூங்குவதற்கு முன் பாதங்களை கழுவுவது நல்ல தூக்கத்தையும், தொற்று நோய்களில் இருந்து விடுபட உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதங்களை ஏன் கழுவ வேண்டும்: பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லக்கூடியவர்கள் நாள்தோறும் வெளியில் செல்வதால், வெளியில் உள்ள தூசு, குப்பை, பாக்டீரியா உள்ளிட்ட நுண்கிருமிகள் பாதங்களில் ஒட்டிக்கொள்ளும். நான் தான் சாக்ஸ் போட்டுக்கொள்கிறேனே, எனது பாதங்களில் எந்த நுண்கிருமிகளும் ஒட்டிக்கொள்ளாது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. சாக்ஸ் போட்டிருப்பதால் பாதங்களில் நாள் முழுவதும் ஏற்படும் வேர்வை, ஈரப்பதம் குவிந்து பாக்டீரியா தொற்று ஏற்படும்.
பாக்டீரியா தொற்றினால் சேற்றுப்புண் போன்ற பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும். சேற்றுப்புண்ணால் கால் விரல்களுக்கிடையில் ஏற்படும் விரிசல் மற்றும் பிளவுகள் வழியாக பாக்டீரியாக்கள் நுழைந்து பரவி, மூட்டுகளையும் பாதிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: Pedicure: செலவே இல்லாமல் வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்... எப்படினு தெரியுமா?
நீரிழிவு நோயாளிகள்: குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தூங்க செல்வதற்கு முன், கால்களை கழுவுவது மிக அவசியம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், தொற்று பரவுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கால்களை சரியாக பராமரிக்காவிட்டால், கால்களுக்கிடையில் அரிப்பு, தோல் அழற்சி, கொப்புளங்கள், செதில் உரிதல், சேற்றுப்புண் போன்ற தொற்று நோய்கள் ஏற்படும்.
பாதங்களை கழுவுவதால் கிடைக்கும் நன்மைகள்: ஆகவே தினமும் பாதங்களை நன்றாக கழுவ வேண்டும். கால்களை நன்றாக கழுவி, வெதுவெதுப்பான நீரில் சிறிது ஊற வைத்தால், அது நல்ல உணர்வைத் தரும். மேலும் தசைகள் மற்றும் மூட்டுகளை தளர்த்துகிறது. குறிப்பாக பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்கிருமிகளை படுக்கைக்கு கொண்டு செல்லாமல் இருப்பதற்கு உதவும். பாதத்தில் இருந்து துர்நாற்றம் வராமல் இருப்பதற்கும் உதவும். மேலும் இரவு நேர நல்ல தூக்கத்திற்கும் உதவும்.
இதையும் படிங்க: தெரிந்து கொள்ளுங்கள்: கருவுறுதல் பற்றிய கட்டுக் கதைகளும்... உண்மைகளும்...!