ஹைதராபாத்: நாம் ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியாகவும், சுறுசுறுப்பாக இருக்க நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றல் உற்பத்திக்கு, மூலக்காரணமாக இருப்பது நாம் உண்ணும் உணவு தான் என்பதை அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்க, தினசரி நாம் உண்ணும் உணவு சமச்சீரானதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.
ஐசிஎம்ஆரின் துணை நிறுவனமான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் (NIN) இது தொடர்பான வழிகாட்டுதல்களை 'இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள்' (Dietary Guidelines for Indians) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, இந்தியர்கள் என்ன உணவு வழிகாட்டுதல்களைப் பின்பற்றலாம்? சரிவிகித உணவு என்றால் என்ன? தனிநபர் எவ்வளவு கலோரிகள் எடுத்துக்கொள்ளலாம்? என்பதையும் விவரித்துள்ளது.
புரதம், காய்கறி, பழங்கள் என நமது அன்றாட உணவில் 8 வகையான உணவுகள் இருக்க வேண்டும் என்கிறது ஐசிஎம்ஆர். அதிலும், தினசரி 100 கிராம் பழங்களை எடுத்துக்கொள்வது கட்டாயம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
வயது மற்றும் உடல் தேவைக்கு ஏற்ப கலோரிகள் எடுத்துக்கொள்வது அவசியம். நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி,முட்டை,தயிர் போன்றவை உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
இதில், நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் அடங்கியுள்ளது. இருப்பினும், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் சாப்பிடவது சாத்தியமற்ற ஒன்று. ஆகையால், மூன்று வேளை நாம் உண்ணும் உணவில் மேற்கூரியவை இருப்பதை உறுதி செய்யுங்கள்.
ICMR பரிந்துரைக்கும் கலோரி அளவு:
- தானியங்கள் - 250 கிராம்
- காய்கறிகள் - 400 கிராம்
- பழங்கள் - 100 கிராம்
- புரதம் - 85 கிராம் (பருப்பு/முட்டை/இறைச்சி)
- பருப்பு வகைகள் - 35 கிராம்
- எண்ணெய்/கொழுப்பு - 27 கிராம்
- குறிப்பாக, நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் சர்க்கரையின் கலோரி அளவு 5% குறைவாக இருக்க வேண்டும் என ICMR நிபுணர்கள் குழு பரிந்துரைக்கிறது.
மேலும், பயன்கள் பெற:
- ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 8 கிளாஸ் (சுமார் 2 லிட்டர்) தண்ணீர் குடிக்க வேண்டும்
- அதிகமாக காபி குடிப்பதால் ரத்த அழுத்த பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், காபியை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது, டீ-க்கும் பொருந்தும்
- உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்னரும் டீ, காபி குடிப்பதை தவிர்க்கவும். பால் சேர்க்காத கிரீன் அல்லது பிளாக் டீ குடித்தால் நல்லது
- ஆரோக்கியமற்ற உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, பீட்சா, பர்கர் போன்ற நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும்
- மேலும், குளிர் பானங்கள் எடுத்துக்கொள்வதை குறைக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்