ஐதராபாத்: '40 வயதிற்கு மேல் நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், உணவுப் பழக்கங்களை முக்கியமாக மாற்ற வேண்டும்' என்கிறார் தெலங்கானாவின் பிரபல அறுவை சிகிச்சை காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டி லட்சுமி காந்த்.
இளம் வயதில் உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், ஜாக்கிங், வாக்கிங் என அனைத்து உடற்பயிற்சிகளையும் செய்து எடையைக் குறைக்கப் போராட வேண்டியதாக இருக்கிறது. அதே, வயது ஆக ஆக உடலில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களால் அதிக உடலுழைப்பு தரக்கூடிய வேலைகளைச் செய்ய முடியாமல் போய்கிறது.
அதிலும், 40 வயதிற்கு மேல் உடற்பயிற்சி செய்வது என்பது அனைவராலும் முடியாத ஒன்றாக இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் தான், சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் மருத்துவர் லட்சுமி காந்த். 40 வயதிற்கு மேல், உடல் எடையைக் குறைக்க, இறைச்சி, பால், தானிய உணவுகளை உட்கொள்வதை விடக் காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.
காரணம், பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக ஊட்டச்சத்துக்கள், குறைந்த கலோரிகள் மற்றும் கொழுப்புகளே இருக்கின்றன எனக்கூறும் மருத்துவர், அதனை சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் உடலுக்கு தேவையான சத்துக்க்ள் கிடைத்து வயிறும் நிறைகிறது என்கிறார்.
தின்பண்டங்களில் கவனம்: தின்பண்டங்களை சாப்பிட தோன்றும் போது முறுக்கு, சிப்ஸ், சாக்லேட் போன்ற சர்க்கரை, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த தின்பண்டங்களை எடுத்துக்கொள்ளாமல் நட்ஸ் வகைகளை சாப்பிட வேண்டும்.
காலை உணவு முக்கியம்: காலை உணவை ஒழுங்காகச் சாப்பிட்டால்,மதியம் குறைவான உணவைச் சாப்பிடலாம். காலை, மதிய உணவைச் சாப்பிடாவிட்டால் இரவில் அதிகமாகச் சாப்பிட நேரிடுகிறது. இப்படிச் சாப்பிட்டுவிட்டு உடலுழைப்பு இல்லாமல் தூங்கி விடுவதால் உடலில் கலோரிகள் அதிகரித்து உடல் எடையும் அதிகரிக்கிறது.
ஜீரண சக்தி குறையும்: வயது ஆக ஆக..இயற்கையாகவே, ஜீரண சக்தி குறைகிறது. அதனால், அளவிற்கு அதிகமாக நாம் உண்ணும் உணவு உடலில் தேங்கி உடல் எடையை அதிகரிக்கிறது. மாலை 6 மணிக்குள் இரவு உணவை முடித்து கொள்வது சிறந்த பயனளிப்பதாக கூறுகிறார்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்: 40 வயதாகும்போது, சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். டீ, காபி, குளிர்பானங்கள், எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள தின்பண்டங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
40 வயதிற்குப் பிறகு, மது குடிப்பது உடல் எடையை அதிகரிக்கிறது. அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் பசி அதிகமாகி உணவு உட்கொள்ளும் தேவை அதிகரிக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மருத்துவ ஆலோசனை: சத்தான உணவு, முறையான உடற்பயிற்சி செய்தாலும் கூட உடல் எடை அதிகரிக்கிறது என்றால் தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வெயிட் லிப்டிங்: 40 வயதை கடக்கும் போது, இயற்கையாகவே தசைகளின் அடர்த்தி குறைகிறது. அவற்றை அதிகரிக்க வெயிட் லிப்டிங் போன்ற பயிற்சிகளை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
இதையும் படிங்க: வேகவைத்த முட்டை Vs ஆம்லெட்...உடல் எடையை குறைக்க எது சிறந்தது?
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அட்டகாசமான 8 முக்கிய குறிப்புகள்!