மழைக்காலம் தொடங்கியுள்ளதால் சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி போன்ற நோய் அறிகுறிகளுடன் மருத்துவர்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களை பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் தாக்கி, தீவிர உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
எனினும் மழைக்கால நோய்கள் குறித்துப் போதிய விழிப்புணர்வும் தடுப்பு நடவடிக்கைகளும் இருந்தால் நோய்ப் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார் சென்னை எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் டாக்டர். நந்த குமார்
வைரஸ் காய்ச்சல்: மழைக்காலங்களில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பெரும்பான்மையாக பாதிக்கப்படுவது சளி,இரும்மல் போன்ற பிரச்சனைகளால் தான். குறிப்பாக, பருவகால காய்ச்சல் (Seasonal Flu) தொற்று அதிகமாக காணப்படும். இதற்காகவே, ஆண்டு தோறும் தடுப்பூசிகள் போடப்படுகிறது.
மழைக்கால பிரச்சனைகள்:
- பருவக்கால காய்ச்சல்
- சைனஸ்
- தொண்டை பிரச்சனை
குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?: மழைக்காலங்களில் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள், ஒன்றோடு ஒன்றாக இருப்பதால் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் இருந்து மற்றோரு குழந்தைக்கு எளிதாக தொற்று பரவுகிறது. மூக்கில் இருந்து நீர் வடிவது, காய்ச்சல், இரும்மல் போன்ற பிரச்சனைகள் எளிதாக ஏற்படுகின்றன.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கூட பருவகால காய்ச்சல் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், இந்த பிரச்சனை இயல்பாகவே இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரியாகும். மூச்சுத்திணறல் (wheezing) மற்றும் குழந்தைகளுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு சளி, காய்ச்சல் தொந்தரவுகள் தொடர்ந்தால் உடணடியாக மருத்துவரை அணுகவேண்டும்.
கவனம் செலுத்துங்கள்:
- குழந்தைகள் நீர்ச்சத்தோடு இருப்பதை உறுதி செய்யவும்
- தேன் கொடுப்பதால் சளி தொந்தரவுகளை குறைக்கலாம்
- அதிக சளி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படும் குழந்தை வீட்டில் இருந்தால் நெபுலைசர் வைத்துக்கொள்வது சிறந்த தீர்வாக இருக்கும்
- குழந்தைகளுக்கு தேவைப்படும் மருத்துகளை வீட்டில் இருப்பு வைத்திருக்க வேண்டும்
- ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு சளி பிரச்சனை ஏற்படத் தொடங்கும் போது நாசி சொட்டுகள் (Nasal Drops) பயன்படுத்தலாம்
- பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவரை அணுகுவதற்கு முன்னதாக, பாராசிட்டமால் மற்றும் முன்னதாக மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொள்ளலாம்
வீட்டிலேயே எப்படி சரி செய்யலாம்?: தினசரி உணவில் சிட்ரஸ் பழங்கள், பச்சை காய்கறிகள், தேன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சளி பிரச்சனைகளை தடுக்கலாம். பொதுவாக, நாம் எப்போதும் பயன்படுத்தும் மருந்துகள் பருவ காய்ச்சலுக்கு பல நேரங்களில் தீர்வாக இருப்பது கிடையாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பெரியவர்கள் மீது கவனம்: மழைக்காலங்களில், வீட்டில் இருக்கும் பெரியவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வது அவசியம். வெளியில் வேலைக்கு சென்று வருபவர்கள் மற்றும் குழந்தைகள் பெரியவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். பெரியவர்கள் காய்கறி சூப் மற்றும் சிட்ரஸ் பழங்களை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மருத்துவம் யாருக்கு தேவை: மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பது, மூச்சுத்திணறல் ஏற்படும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆலோசனை பெற வேண்டும். அதுமட்டுமல்லாமல், விழிப்புணர்வுடன் இருப்பது பல பிரச்சனைகளில் இருந்து காக்கும் என்கிறார் மருத்துவர் நந்த குமார்.
இதையும் படிங்க: சளி, இருமலை விரட்ட 8 எளிய வீட்டு வைத்தியம்..சித்த மருத்துவர் கூறும் டிப்ஸ் இதோ!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்