ஐதராபாத்: பசிக்கும் போது ஸ்நாக்ஸ் சாப்பிடுவது இயற்கையான பழக்கம் தான். ஆனால், யோசித்து பாருங்கள், சில நேரங்களில் போர் அடிக்கும் போது என்ன செய்வது என்று தெரியாமல் தின்பண்டங்களை சாப்பிட்டு நேரத்தை போக்குகிறோம். அப்படித்தானே? பொதுவாகவே, மனிதன் சலிப்படையும் போது, மூளை நம்மை திசை திருப்ப முயற்சிக்கும்.
அப்போது நாம் மூளைக்கு ஏற்ப தவறுதலாக திசை மாறி, மொறுமொறுப்பான தின்பண்டங்கள், டீ, காபி போன்று சாப்பிட்டு விடுகிறோம். இதை பதிவு செய்து கொள்ளும் மூளை, போர் அடிக்கும் போதெல்லாம், நம்மை அறியாமல் உணவை தேடி செல்ல வைக்கிறது.
இப்படியான பழக்கம் நாளடைவில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பழக்கமாக மாறி உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த சிக்கல்களில் இருந்து தப்பிக்க ஒரே வழி, சலிப்பு தட்டும் போதெல்லாம் சிறிது மெனக்கெட்டு வேறு வழிகளில் பயனிப்பது தான். அப்படி, உங்களுக்காக சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
உங்களை திசை திருப்புங்கள்: சலிப்பாக இருக்கும் போது, உங்கள் கவனத்தை ஆரோக்கியமான முறையில் திசை திருப்புவது முக்கியம். ஒரு குட்டி வாக், வாசிப்பது, நண்பர்களுடன் தொலைப்பேசியில் அல்லது நேரில் அரட்டை அடிப்பதன் மூலம் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு மறந்து விடுகிறது.
தண்ணீர் குடியுங்கள்: வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென பசி எடுப்பது போலவும், வாயில் எதையாவது போட்டு மென்று கொண்டிருக்க வேண்டும் என தோன்றுவது இயல்பு தான். ஆனால், அப்போது உண்மையில் நமக்கு பசி எடுப்பது கிடையாது. இப்படியான சூழ்நிலையில் தண்ணீரை குடியுங்கள். அது தாகத்திற்கான அலாரமாக கூட இருக்கலாம்.
உண்மையாக பசி தானா? : நீங்கள் ஸ்நாக்ஸ் வகைகளை எடுத்துக்கொள்ளும் போது, உங்களுக்கு உண்மையில் பசிக்கிறதா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பெரும்பாலும், அது உண்மை பசியாக இருப்பது கிடையாது. ஆகையால், வாயில் உணவை போடுவதற்கு முன் யோசித்து செயல்படுங்கள்.
வேறு எதையாவது மெல்லுங்கள்: ஸ்நாக்ஸ் சாப்பிட தோன்றும் போது, அதற்கு மாறாக பப்பில்கம் அல்லது சோம்பு போன்றவற்றை மெல்ல முயற்சியுங்கள். இது, உங்களது மனதையும் வாயையும் பிஸியாக வைத்து ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிடுவதில் இருந்து தவிர்க்கிறது. மேலும், தேவையற்ற உணவுப்பொருட்கள் மீது உள்ள ஆர்வத்தை குறைக்கிறது.
குளுக்கோஸ் அளவை பராமரிக்கவும் : இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது, தின்பண்டங்கள் மீது ஆசை அதிகமாக இருக்கும். நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சமச்சீரான உணவை உட்கொள்வது குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. இது, திடீர் பசியை தவிர்க்கிறது.
உடற்பயிற்சி : ஒரு குட்டி நடைப்பயிற்சி உங்கள் மனநிலையை மேம்படுத்துவதோடு உணவுப் பசியையும் குறைக்கும். அதற்கு காரணம், மனதை ரிலாக்ஸ் செய்து அலுப்பு குறைவது தான். இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் உணவுப் பழக்கத்தை நீங்கள் சிறப்பாக நிர்வகிக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.