சென்னை: பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்ப்பில் தட்டம்மை (Measles), சின்னம்மை (Chicken Pox), பொன்னுக்கு வீங்கி (Mumps) பற்றிய விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், "அம்மைநோய் ஒரு வகை வைரஸினால் பரவும் நோயாகும். இது எளிதில் பரவும். இந்நோய் பொதுவாகக் குழந்தைகளை எளிதில் தாக்கும்.
பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள்(Mumps): காது மடலுக்குக் கீழ் உள்ள உமிழ் நீர் சுரப்பியை வைரஸ் தொற்று தாக்குவதால், தாடையின் இருபுறமும் வீக்கம் தோன்றுகிறது. மேலும் காய்ச்சல், கழுத்துவலி, தலைவலி, பசியின்மை, பலவீனம், சாப்பிடும்போதோ, அல்லது விழுங்கும்போதோ வலி ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
சின்னம்மையின் (Chicken Pox) அறிகுறிகள்: உடலில் நீர் கட்டியைப்போன்ற சிறிய கொப்பளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர் கோர்த்துக் காணப்படும் கொப்பளங்களிலிருந்து நீர் வடியும். பின்னர் நீர் வறண்டு கொப்பளங்கள் உதிரும். இந்த நோய் குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் பரவும்.
தட்டம்மையின்(Measles) அறிகுறிகள்: இந்நோய்க்கு மணல்வாரி அம்மை என்ற மற்றொரு பெயரும் உண்டு. காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், கண்ணில் நீர் வடிதல் அதன் அறிகுறிகளாகும். முகம் மற்றும் காதின் பின்பகுதிகளில் வேர்க்குரு போன்ற அறிகுறிகள் தோன்றி சிவப்பு புள்ளிகளாக உடல் முழுவதும் பரவிக் காணப்படும். கண்கள் சிவந்து வீக்கமாகக் காணப்படும். இரண்டு வாரங்களில் இந்த அம்மையும் தானாகவே சரியாகிவிடும்.
மேற்கண்ட நோயினால் பாதிக்கப்பட்டவரின் உமிழ் நீர், தும்மல் அல்லது இருமல் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களைப் பகிர்ந்துகொள்வதின் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது. அம்மை ஒரு வைரஸ் தொற்று என்பதால், இரண்டு வாரங்களில் இந்நோய் தானாகவே சரியாகிவிடும். எனினும் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். நோய் பரவாமல் தடுக்க நோய் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவதின் (Isolation) மூலம் மற்றவர்க்குப் பரவுவதை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
- வெய்யிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி நீர் அருந்தவேண்டும்.
- இளநீர், பழங்கள், பழச்சாறுகள், போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
- கூல் டிரிங்க்ஸ், ஐஸ் கிரீம் போன்ற குளிர்ச்சியான பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
- பருத்தியிலான(Cotton) தளர்வான உடைகளையே அணியவேண்டும்.
- வெயிலில் சுற்றுவதைத் தவிர்த்துத் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
- இறுக்கமாக உடை அணிவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் பாலியஸ்டர், நைலான் போன்ற உடைகளைத் தவிர்க்க வேண்டும்.
தட்டம்மை(Measles), பொன்னுக்கு வீங்கி(Mumps) மற்றும் சின்னம்மை (Chicken Pox) இருந்தால், உடனே அருகிலுள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கோ, அல்லது அரசு மருத்துவமனைக்கோ தெரியப்படுத்தி, சிகிச்சையினை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Aadhaar Historyஐ பார்ப்பது எப்படி? ஆதார் மோசடிகளை தடுக்க சூப்பர் வழி!