சென்னை: கருமையான அடர்த்தியான முடியை வைத்துக் கொள்ள பெண்களுக்கு மட்டும் தான் ஆசையா? கல்லூரி செல்லும் பதின்பருவத்தினர் தொடங்கி வேலைக்கு செல்லும் ஆண்கள் வரை முடி பிரச்சனை முடிவில்லாத பிரச்சனையாக இருக்கிறது. அதிலும் சிலர் இளம்வயதிலேயே வழுக்கையை சந்தித்து விடுகிறார்கள்.
இப்படியான சூழ்நிலையில், தினமும் வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களை நீங்கள் கொண்டுவருவதால் முடி பிரச்சனையை முழுமையாக தீர்க்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? அதற்கான தீர்வு என்ன என்பதை இதில் பார்க்கலாம்.
மசாஜ் பண்ணுங்க: தினமும் காலையில் எழுந்து உச்சந்தலையில் 3 நிமிடங்கள் மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி அடர்த்தியாக வளரும். மசாஜ் செய்வதற்கு விலை உயர்ந்த எண்ணெய் தான் வேண்டும் என்பதில்லை. தேங்காய் எண்ணெய் இருந்தாலே போதுமானது. காலையில் இதுக்கெல்லாம் நேரம் இல்லை என சொல்பவர்கள் இரவு படுக்கைக்கு சென்றபின் படுத்தவாரே கூட 5 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம்.
சீப்பை பயன்படுத்தவும்: பல இளைஞர்களிடம் தங்களுக்கென ஒரு சீப்பு இருப்பது கிடையாது. வீட்டில் ஒருத்தர் வாங்கி வைத்த சீப்பை அனைவரும் பயன்படுத்தி நாட்களை ஓட்டி விடுகிறார்கள். அதிலும் சிலர் தங்களது விரல்களையே சீப்பாக பயன்படுத்துவதையும் நாம் பார்த்திருப்போம்.
இப்படியான செயல்களை முதலில் தவிர்த்து, அழுக்கு அல்லாத சீப்பை பயன்படுத்த வேண்டும். இதனால், முடியில் ஏற்படும் சிக்கல்களை தவிர்த்து முடி வளர்வதற்கு உதவியாக இருக்கிறது. குறிப்பாக, மரத்தால் ஆன சீப்பை பயன்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தினமும் தலைக்கு குளிக்குறீங்களா?: தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்த்து வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் மட்டுமே ஷாம்பு பயன்படுத்தி நல்ல தண்ணீரில் அலச வேண்டும். அதிக ஷாம்பு பயன்படுத்துவதால் முடியில் இயற்கையாகவே இருக்கும் எண்ணெய் நீங்கி வறட்சியாக மாறும் அபாயம் ஏற்படுகிறது.
நோ ஸ்மோக்கிங்: புகைபிடித்தல் முடி உதிர்தலுக்கு காரணமாக அமைவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றனர். பொதுவாக, மன அழுத்தம் முடி உதிர்வை அதிக்கப்படுத்தும். இப்படியான சூழலில், 'எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினாற் போல' மனஅழுத்தத்தில் இருக்கும்போது புகைபிடித்தால் முடி வளர்ச்சி சுழற்சியை மொத்தமாக பாதிக்கிறது.
முடியை ட்ரிம் செய்யவும்: முடியை நீளமாக வளர்க்க வேண்டும் என்ற ஆசையில் பல மாதங்களாக முடியை வெட்டாமல் அப்படியே விட்டுவிடுவது முடி வளர்வதை முற்றிலுமாக தடுக்கிறது. மாதத்திற்கு ஒரு முறையாவது முடியை லைட்டாக ட்ரிம் செய்வதால் முடி வளர்ச்சியை தூண்டி ஆரோக்கியமான முடி வளர வழிவகுக்கிறது.
தூக்கம், தண்ணீரில் கவனம்: வெளிப்புற தோற்றத்திற்காக என்ன தான் செய்தாலும், உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் நினைத்தது நடக்கும். அப்படி, ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தூக்கமும், 8 டம்ளர் தண்ணீரும் அவசியம் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
சப்ளிமெண்ட்ஸ்: என்ன செய்தாலும் முடி வளரவில்லை என நினைப்பவர்கள் மருத்துவரை அணுகி உங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சப்ளிமெண்ட்ஸ் (Hair Supplements) எடுத்து கொள்ளலாம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சப்ளிமெண்ட்ஸ் ஊட்டச்சத்து குறைபாடை நீக்கி முடி வளர உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கு உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்)