காரக்பூர்: டீ கடைகளில் தேநீர் அருந்த முன்பெல்லாம் கண்ணாடி டம்ளர்களைப் பயன்படுத்தி வந்தார்கள். நிகழ்ச்சிகள் நடக்கும் வீடுகளில் பந்தி விளம்பும்போது சில்வர் டம்ளர்களைப் பயன்படுத்தினார்கள். அலுவலகங்களில் கூட சில்வர் அல்லது மண் குடுவைகளைக் கூட பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் சமீப காலங்களாக அதிலும் குறிப்பாகக் கூற வேண்டும் என்றால், கொரோனா நோய்த் தொற்று பரவலுக்குப் பிறகு பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது.
ஒரு முறை பயன்படுத்தி விட்டுத் தூக்கி எரிந்துவிடலாம் என்ற ஒரு அடிஷ்னல் ஆஃபரும் உள்ள நிலையில் யாரால் அதைத் தவிர்க்க முடியும். பிளாஸ்டிக் கப்புகளில் டீ, காபி குடித்தால்தானே பிரச்சனை நாங்கள் பேப்பர் கப்பில்தானே குடிக்கிறோம் என நீங்கள் நினைக்கலாம். அது எப்படி சாத்தியம்? வெறும் பேப்பரில் தண்ணீர் நனைந்தாலே அது கிழிந்து கூழ்போல் ஆகிவிடும்.
ஆனால் நாம் டீ, காபி குடிக்கப் பயன்படுத்தும் பேப்பர்கள் மட்டும் ஏன் நீண்ட நேரம் அப்படியே இருக்கிறது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஐஐடி கோரக்பூர் பேராசிரியரான டாக்டர் சுதா கோயல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் படிக்கும் ஆராய்ச்சி அறிஞர்கள் வேத் பிரகாஷ் ரஞ்சன் மற்றும் அனுஜா ஜோசப் ஆகியோர் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அதில், பேப்பர் கப்பில் சூடான டீ, காபி, அல்லது நீர் ஊற்றிக் குடிக்கும்போது அதில் மைக்ரோ-பிளாஸ்டிக் மாசுகள் கலந்து அது உடலுக்குள் செல்வதாகவும், இது காலப்போக்கில் பல்வேறு சிக்கலான உடல்நல உபாதைகளுக்கு வழிவகை செய்யும் எனவும் எனவும் கண்டுபிடித்துள்ளனர். ஒரு பேப்பர் கப் என்பது நுண்ணிய பல்வேறு அடுக்குகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதன் உள் அடுக்கு பிளாஸ்டிக்கின் ஒரு வகையான பாலி எத்திலினால் முழுமையாக்கப்படுகிறது. அதில் திரவத்தை ஊற்றும்போது அது சுருங்கவோ அல்லது மடங்கவோ செய்யாமல் அப்படியே இருக்கும். குறிப்பிட்டுச் சொல்லப்போனால் கண்களுக்குத் தெரியாத வகையில் பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருளால் ஆன கப் தான் பேப்பர் கப் என்றே சொல்லலாம்.
மேலும் ஆய்வாளர்களின் ஆராய்ச்சி முடிவில், பேப்பர் கப்பில் சூடானவற்றை ஊற்றிய 15 நிமிடங்களில் அதில் எதிர்வினை ஆற்ற தொடங்கும் எனவும், நாம் அதை உட்கொள்ளும்போது உடலுக்குள் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் என்ற அடிப்படையில் அயனிகள், பல்லேடியம், குரோமியம் மற்றும் காட்மியம் போன்ற நச்சுத்தன்மை மிக்க இரசாயனங்கள் கடந்து செல்கின்றன எனவும் கூறியுள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளித்த பேராசிரியர் சுதா கோயல், எங்கள் ஆய்வின் முடிவில், 100 மில்லி சூடான திரவம் ஊற்றப்பட்ட 15 நிமிடத்தில் அதில், இருந்து சுமார் 25,000 மைக்ரான் அளவிலான மைக்ரோ-பிளாஸ்டிக் துகள்கள் வெளியாகின்றன எனவும், நாள் ஒன்றுக்கு ஒரு நபர் பேப்பர் கப்பில் 3 முறை டீ, காபி அல்லது சூடான எந்த ஒரு பொருளை உட்கொள்ளும்போதும் சுமார் 75 ஆயிரம் சிறிய மைக்ரோ-பிளாஸ்டிக் துகள்களையும் சேர்த்து உட்கொள்கிறார் என்பது உறுதியாகியுள்ளது எனவும் கூறியுள்ளார். இந்த ஆய்வு பேப்பர் கப்பில் சூடான திரவத்தை ஊற்றி 15 நிமிடங்கள் அப்படியே விடப்பட்டு அதன் பிறகு மேற்கொள்ளப்பட்டது என்பதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்
இதை நாம் தொடர்ந்து பயன்படுத்தும்போது புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு அபாயகரமான உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும், மாற்றாக முன்னோர்களின் மண் தயாரிப்பு பொருட்கள் மண்ணுக்கும், உடலுக்கும் தீங்கு விளைவிக்காதவை எனவும் சுட்டிக்காட்டி உள்ளனர். ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எரியும் வகையிலான பொருட்களின் தேவை தவிர்க்க முடியாதது என்றாலும், அதற்கு மாற்றாகச் சுற்றுச் சூழலுக்கும், உயிர் பாதுகாப்பிற்கும் உகந்த வகையில் மாற்றுப் பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என்பதும் மக்கள் அதைப் புரிந்து ஏற்று வாழப் பழகிக்கொள்ள வேண்டும் எனவும் பேராசிரியர் வீரேந்திர கே திவாரி கூறியுள்ளார்.
இது குறித்து மருத்துவர் அருண் குமார் தனது இணையதள பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், அவரும் இந்த பேப்பர் கப் பயன்பாட்டின் விளைவுகள் மற்றும் ஆராய்ச்சியின் விளக்கம் தொடர்பாகப் பேசியுள்ளார்.
அதேபோல, MEL Chemistry என்ற You Tube தளத்திலும் இதன் எக்ஸ்பிரிமெண்ட் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. (குறிப்பு: 15.2k சப்ஸ்க்ரைபர்ஸ்களை (subscribers) கொண்ட இந்த தளத்தின் உண்மைத் தன்மைக்கு ஈடிவி பாரத் பொறுப்பேற்காது)
இதையும் படிங்க: இயர் பட்ஸ் எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம்:மருத்துவர் கூறுவது என்ன? - Dangers of using ear buds