சென்னை: தூங்கும் நேரமும், ஆழ்ந்த உறக்கமும் வயதுக்கு ஏற்ப மாற்றம் அடைந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், என்ன ஆனாலும் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஒரு புறம் மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும், வேலை, மன அழுத்தத்தால் பலர் தூக்கத்தை தொலைத்து தான் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்த வயதினர், எவ்வளவு நேரம் தூங்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைப்பது என்ன?
0-3 மாத குழந்தை: குழந்தை பிறந்து முதல் மூன்று மாதங்களுக்கு குழந்தைகளின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் அவர்களுக்கு சரியான தூக்கம் மிக முக்கியமாக அமைகிறது. பச்சிளம் குழந்தைகள் 16 முதல் 20 மணி நேரம் தூங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
4-11 மாத வயதுடைய குழந்தைகள்: 4 மாதத்தில் இருந்து குழந்தைகளின் மூளை மற்றும் உடல்கள் வளரத் தொடங்குவதால் குழந்தைகளின் தூக்கத்தில் மாற்றம் ஏற்படுகின்றன. குறிப்பாக, முகம் பார்க்கத் தொடங்குவதால், விளையாட்டு அதிகரித்து அவர்களது தூக்கம் 12 முதல் 15 மணி நேரமாக குறைகிறது.
1-2 வயது குழந்தைகள்: ஒன்று முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க ஒரு நாளைக்கு 11 முதல் 14 மணி நேரம் தூங்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
3-5 வயது குழந்தைகள்: இந்த வயதில் குழந்தைகள் ப்ளே ஸ்கூல் (Play School) செல்லத் தொடங்கி விடுகிறார்கள். இதனால், பள்ளிகளில் மாணவர்களுடன் விளையாட்டு அதிகரித்து விரைவில் சோர்வடைவார்கள். எனவே, இந்த வயதில் குழந்தைகளின் மூளை புத்துணர்ச்சியோடு இருக்க, ஒரு நாளைக்கு 10 முதல் 13 மணி நேரம் தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
6-12 வயது குழந்தைகள்: பள்ளி செல்லும் கட்டத்தில் குழந்தைகள் பல வளர்ச்சி மாற்றங்களைச் சந்திக்கின்றனர். இந்த வயதில் அவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அதற்கு அவர்களுக்கு, ஒரு நாளைக்கு குறைந்தது 9-12 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது.
13-18 வயது: விளையாடுவது, படிப்பது என பெரும்பாலான இளைஞர்கள் தங்களுக்குப் பிடித்தமான செயல்களில் ஈடுபடுவது இந்த வயதில் தான். மேலும், இந்த வயதில் தான் அவர்களது உடலில் பெரும் மாற்றத்தைக் காண்பார்கள். அந்த வகையில், மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்த வயதில் ஆரோக்கியமாக இருக்க ஒரு நாளைக்கு 8-10 மணிநேர தூக்கம் அவசியம் என்கின்றனர்.
18-60 வயது: மன அழுத்தம், வேலை, குடும்பப் பொறுப்புகள், நிதிப் பிரச்னைகளால் இந்த இடைப்பட்ட வயதில் பலர் உடல் பராமரிப்பை புறக்கணிக்கிறார்கள். இதனால் பலர் அவர்களது தூக்கத்தில் கவனம் செலுத்துவது கிடையாது. ஆனால், இந்த வயதில் ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொருவருக்கும் 7-9 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது.
61 மற்றும் அதற்கு மேல்: பொதுவாக சில உடல் செயல்முறைகள் இந்த வயதில் மெதுவாக இருக்கும். மேலும், வயதானவர்கள் மூட்டு வலி மற்றும் தூக்கமின்மை போன்ற உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், வயதானவர்கள் 7-8 மணிநேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்)