சென்னை: வெப்ப அலை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இதன் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் காலநிலை மாற்றம் தான் புவியியல் நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், பூமி வெப்ப மயம் அவதை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகளும் போராடி வருகிறது.
ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தான் வெயில் கொளுத்தும். ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமே கோடை வெயில் தாண்டவமாட தொடங்கியது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் மக்களையும், விலங்குகளையும் வாட்டி வதைத்தது. வெப்பசலனம் காரணமாக தமிழகம், கேரளம், கர்நாடகா உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மே மாதத்தில் மழை பெய்தது.
ஆனால் வட மாநிலங்களில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பல இடங்களில் 50 டிகிரியையும் தாண்டி வெயில் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருளாக, “நில மறுசீரமைப்பு பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்க்கும் திறன்” என்பதை உள்ளடக்கி பல்வேறு விழிப்புணர்வு செய்திகள் வெளியாகின.
அந்த வகையில், இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை, இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இது இதய நோய் இறப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பிலும், இருதய நோய்களால் ஏற்படும் இறப்பு அபாயம் அதிகரிப்பதாகவும், 2000ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலக்கட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 4 இலட்சத்து 89 ஆயிரம் வெப்பம் தொடர்பான இறப்புகள் நிகழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றில் 45 சதவீத இறப்புகள் ஆசியாவில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இந்தாண்டு மே மாதத்தில் மட்டும் வெவ்வேறு இருதய நோய்களால் 605 இறப்புகள் பதிவாகி உள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப பக்கவாதத்தால் மே மாதத்தில் 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கூடுதலாக மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், வெப்ப பக்கவாதம் காரணமாக 56 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி படுத்தப்பட்டுள்ளது.
இதில் 46 பேர் மே மாதத்தில் உயிரிழந்துள்ளனர். இது குறித்து குருகிராமில் உள்ள பாராஸ் ஹெல்த் மருத்துவர் ஆர்.ஆர் தத்தா கூறுகையில், வெளியில் வெயில் அதிகமாகும் போது, உடல் தன்னை குளிவிக்க போராடும். அப்போது இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய கடுமையாக உழைக்க வேண்டும். இதனால் இரத்த அழுத்தம் ஏற்படும். இந்த இரத்த அழுத்தத்தால் தலைச்சுற்றல், குமட்டல் முதல் மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் வரை ஏற்படலாம்” என்று கூறினார்.
மேலும் கூறிய அவர், “புவனேஸ்வர் இந்திய தொழில்நுட்ப நிறுவன (IIT Bhubaneswar) ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய ஆய்வில், இந்திய நகரங்களில் 60 சதவீத வெப்பமயமாதலுக்கு நகரமயமாதலே காரணம் என்று தெரிய வந்துள்ளது. உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் நகரங்களில் சுமார் 1 சதவீத நிலம் மட்டுமே உள்ளதாக நேச்சர் ஜர்னல் என்ற இதழில் கூறப்பட்டுள்ளது.
வெப்ப அலைகள் பெரும்பாலும் காலநிலை மற்றும் வானிலை சீர்குலைவுகளால் ஏற்படுவதாக இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியத்தின் தலைமை ஆலோசகர் ஹியாம் முண்டோல் தெரிவித்துள்ளார். குறைந்த அளவிலான தாவரங்கள் மற்றும் அதிகளவிலான கட்டுமானங்கள் வெப்பநிலையை அதிகரிக்கிறது. பசுமை இல்ல வாயுக்களான கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு வெளியேற்றத்தை குறைப்பதும், காடுகளின் பரப்பை அதிகரிப்பதும் தான் இதற்கு தீர்வு” என்று கூறினார்.
மேலும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், வெப்பம் அதிகமுள்ள நேரங்களில் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: உங்கள் குழந்தைக்கு கண் பார்வை பிரச்சினை இருக்கிறதா?.. எப்படி கண்டறிவது? - Parenting Tips