சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 38 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நல்லச்சாராயத்திற்கும் கள்ளச்சாராயத்திற்கும் என்ன வித்தியாசம்? கள்ளச்சாராயம் குடித்தால் மரணம் தானா? என பல கேள்விகள் அனைவரது மனதிலும் எழத் தொடங்கி உள்ளன.
பொதுவாக, டாஸ்மார்க் மற்றும் மதுபான பார்களில் விற்கப்படும் மதுக்களில் குறிப்பிட்ட அளவு மட்டும் எத்தனால் கலக்கப்படுகிறது. இதே, கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்படுகிறது. இந்த எத்தனாலுக்கும், மெத்தனாலுக்கும் என்ன வித்தியாசம்?. கள்ளச்சாராயம் அருந்திய பின் வரும் விளைவுகள் என்ன என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகர், அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் டாக்டர். வி.பி. சந்திரசேகரன்.
கள்ளச்சாராயத்தால் உயிருக்கு ஆபத்தா?: கள்ளச்சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் குறித்து பேசிய டாக்டர், "கள்ளச்சாராயத்தில் எத்தனால் (Ethanol) கலப்பதற்கு பதிலாக மெத்தனால் (Methanol) கலக்கப்படுகிறது. மெத்தனால் உடலுக்குள் சென்று வளர்ச்சிதை மாற்றம் அடையும் போது பார்மிக் அமிலமாக உருவெடுத்து, உடலுக்கு விஷ தன்மையை அளிக்கிறது.
உடலில் ஏற்படும் மாற்றம்: இதனால் முதலில் பாதிக்கப்படுவது கண். அதாவது, கண் உருத்தலை தொடர்ந்து கண் பார்வை மங்கலாக மாறி வாந்தி , மயக்கம் என கண் பார்வை முற்றிலுமாக செயலிழந்து உயிர் பிரிகிறது.
முதலுதவி மற்றும் மருத்துவமனைக்கு சென்ற பின் செய்யும் அவசர சிகிச்சை. நரம்பு மூலமாக எத்தனால் கொடுக்கப்படுகிறது. மருத்துவமனையில் எத்தனால் தட்டுப்பாடு ஏற்பட்டால் நல்லச்சாராயமே மருந்தாக கொடுக்கப்படுகிறது.
இதற்கு அடுத்ததாக, ஃபோமெபிசோல் (Fomepizole) என்ற மெத்தனாலின் நச்சுதன்மையை குறைக்கும் தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது. மருத்துவமனையில் இந்த மருத்தின் இருப்பு பற்றாக்குறையாகும் பட்சத்தில் டயலஸிஸ் தொடங்கப்பட்டு உடலில் இருந்து மெத்தனால் எடுக்கப்படுகிறது. காலம் தாழ்த்தினால் கண் பார்வை முற்றிலுமாக செயலிழந்து உயிர் போகும் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்" என எச்சரிக்கிறார் மருத்துவர்.
இதையும் படிங்க: மழைக்கால நோய்களில் இருந்து தப்புவது எப்படி? இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்.!
இதையும் படிங்க: 2,327 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ அறிவிப்பு வெளியீடு!