சென்னை: மாறிவரும் வாழ்க்கை முறையால், பலரும் பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக நீரிழிவு நோயினால் உலகம் முழுவதிலும் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1980இல் 108 மில்லியனாக இருந்த நிலையில், 2014இல் 422 மில்லியனாக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO - World Health Organization) தெரிவித்துள்ளது.
அதிக வருமானம் கொண்ட நாடுகளை விட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நீரிழிவு நோய் வேகமாக அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உணவு முறை, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் நீரிழிவு நோயின் விளைவுகளை தவிர்க்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
அவற்றில் முக்கியமான ஒன்று உணவு முறையாகும். எந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்?, எந்த உணவை எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதில் குழப்பமடைகின்றனர். குறிப்பாக எந்தெந்த பழங்களை உட்கொள்ளலாம். எந்தெந்த பழங்களை உட்கொள்ளக்கூடாது என்பதில் இந்த குழப்பம் அதிகமாகவே உள்ளது. தனக்கு சர்க்கரை நோய் இருப்பதால் எந்த பழங்களையும் உட்கொள்ளக்கூடாது என சிலர் கருதுகின்றனர்.
இந்த குழப்பத்தைப்போக்க நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த பழங்களை உட்கொள்ளலாம் என வழிகாட்டுகின்றனர் நிபுணர்கள். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட பழங்களை உண்ண வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன.
இத்தன்மை கொண்ட நீரிழிவு நோயாளிகள் உண்ணக்கூடிய 10 பழங்களை பார்க்கலாம்.
ஆப்பிள்: ஆப்பிளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதில் 2.4 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள்கள் சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதில் உள்ள சத்துக்கள் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன.
பெர்ரி பழங்கள்: பெர்ரி வகை பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, பிளாக்பெர்ரிகளில் நார்ச்சத்து, விட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவகேடோ: அவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்பு, குறைந்த கார்போஹைட்ரேட், அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. இதனால் அவகேடோ நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அவகேடோ சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தர்பூசணி: தர்பூசணி பழம் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டதாகும். இதில் இயற்கையான இனிப்பு இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். தர்பூசணி சாப்பிடுவது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும் என்றும், நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாதுளை பழம்: உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு மாதுளை பழம் பெரிதும் உதவுகிறது. இது ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. மாதுளையை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ குடிப்பது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிவி: கிவி பழத்தில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கார்போஹைட்ரேட்கள் உள்ளன. இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளதால் கிவி நீரிழிவு நோயாளிகளுக்கு நிறந்த பழம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்