ஹைதராபாத்: பூசணிக்காய், உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும் என்பதை பலரும் அறிந்ததே. ஆனால், நாம் கண்டுக்கொள்ளாமல் தவிர்க்கும் பூசணி விதைகளிலும் பல ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, ஆண்களுக்கு ஏற்படும் சில வகையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு பூசணி விதைகள் மருந்தாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
இதய ஆரோக்கியம்: பூசணி விதைகளில் பல்வேறு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், கால்சியம்,இரும்புச்சத்து,புரதம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ,பி,சி,டி,பி 12 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது இயற்கையாகவே இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
சீறுநீரகம் செயல்பாடு: பூசணி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுவதால், இதனை உட்கொள்வதன் மூலம் சிறுநீரக செயல்பாடு நன்றாக இருக்கும் என்கின்றனர். மேலும், சிறுநீரகங்களில் கற்கள் உருவாகும் வாய்ப்பையும் குறைக்கிறது.
புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தைத் தடுக்கிறது: வயதான ஆண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பின்னணியில், நீரிழிவு நோயுடன் புரோஸ்டேட் சுரப்பியின் (Prostate gland) வளர்ச்சியும் ஒரு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். இது, புரோஸ்டேட் புற்றுநோய்க்கு வழிவகுப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.பூசணி விதைகள் புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தைத் தடுக்கிறது. (புரோஸ்டேட் என்பது ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு சுரப்பி)
2014ல், இயற்கை சிறுநீரகவியல் குறித்து ஜெர்மன் ஆராய்ச்சி நடவடிக்கைகள் (GRANU) பூசணி விதைகள் பற்றிய ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆராய்ச்சியில், 1,431 ஆண்களுக்கு (50-80 வயது) பூசணி விதைகள் வழங்கப்பட்டன. அந்த ஆய்வில், தினமும் பூசணி விதைகளை எடுத்துக்கொண்ட ஆண்களுக்கு ஆரோக்கியமான புரோஸ்டேட் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எடை இழப்பு: உடல் எடையை குறைக்க விரும்புவோர் பூசணி விதைகளை தினமும் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். காரணம், இவற்றை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கிறது.
- இந்த விதைகளில் உள்ள மெக்னீசியம், துத்தநாதம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் பூசணி விதைகளை சாப்பிடுவதன் மூலம் பதற்றத்தை குறைக்கலாம்.
- குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு ஸ்பூன் பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் இரத்த குளுக்கோஸ் அளவு கட்டுக்குள் இருப்பதை காணலாம்.
- பூசணி விதைகளை சாப்பிடுவதால் தூக்கமின்மை குணமாகும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இதன் காரணமாக இரவில் நல்ல தூக்கம் வருவதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகின்றது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.