இங்கிலாந்து: வேப் (vape) பயன்பாடு என்பது உலக அளவில் இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு மிக முக்கியக் காரணம், அதன் ஃப்ளேவர் மற்றும் கையாள மிகவும் எளிமை என்பதுதான். Vape-ல் பல்வேறு வகையான ஃப்ளேவர்கள் கிடைக்கும் நிலையில், சிகிரெட் பிடித்தால் வரும் ஒருவகையான ஸ்மெல் இதில் வராது. அதேபோல், தேவைப்படும்போது அளவாகப் பயன்படுத்திவிட்டு எடுத்து வைத்து மீண்டும் பயன்படுத்தலாம்.
முடிந்த பிறகு தேவையான ஃப்ளேவரில் Vape ரீபில் செய்துகொள்ளலாம் மற்றும் வெளியில் செல்லும்போது கையில் எடுத்தும் செல்லலாம். இவ்வளவு வசதி இருப்பது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் இதைப் பிடிக்கும்போது இளைஞர்கள் பலர் ஒரு ஸ்டைலாக நினைத்துக்கொண்டு அதற்கு அடிமையாகும் அவலமும் பல நாடுகளில் அரங்கேற ஆரம்பித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் vape பயன்பாடு என்பது மிகவும் சாதாரணமாகப் பார்க்கப்படுகிறது. சிகிரெட்டை விட vape பரவாயில்லை, நல்லதுதான் என்ற அவநம்பிக்கையும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இதுபோன்ற ஒரு நம்பிக்கை மற்றும் தனது நண்பர்கள் பயன்படுத்துவதைப் பார்த்து தானும் அதுபோல் Vape புகைத்துப் பார்க்க வேண்டும் எனத் தனது 15-வது வயதில் நினைத்த இங்கிலாந்தைச் சேர்ந்த 'கைலா பிளைத்' என்ற சிறுமி நாள் ஒன்றுக்கு 400 சிகிரெட் பிடிப்பதற்குச் சமமான அளவு vape புகைத்து, தனது 17-வது வயதில் அதாவது கடந்த மே மாதத்தில் நுரையீரல் செயலிழப்புக்கு ஆளாகி இருக்கிறார்.
நுரையீரலில் கொப்புளங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 'கைலா பிளைத்' பல்வேறுபட்ட அறுவை சிகிச்சை மற்றும் பல லட்சம் ரூபாய் செலவுக்குப் பிறகு உயிர் தப்பி இருக்கிறார். இருப்பினும் முன்பு இருந்ததுபோன்ற முழுமையான உடல் ஆரோக்கியம் கிடைப்பதில் சிக்கல் இருக்கும் சூழலோடு அவர் தனது வாழ்நாளைக் கடக்க நேரிடும் அவலத்தையும் எதிர்கொண்டுள்ளார்.
இது குறித்து அவரின் தந்தை பேசுகையில்,: "எனது மகள் அவளின் நண்பர்கள் vape பயன்படுத்துவதைப் பார்த்து அவளும் அதில் ஆர்வம் கொண்டாள். நாள் ஒன்றுக்கு சுமார் 4 ஆயிரம் பஃப் வரை பிடித்துள்ளார். இந்நிலையில் கடந்த மே மாதம் 11ஆம் தேதி அவளின் நண்பரது வீட்டில் வைத்து தூக்கத்திற்கு இடையே மயங்கி விழுந்துள்ளார். உடல் முழுவதும் நீல நிறமாக மாறியது.
அவளின் நுரையீரல் முழுவதும் சேதம் அடைந்த நிலையில், உயிர் பிழைப்பதே கடினம் என்ற சூழலும் நிலவியது. பிறகு மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட நுரையீரலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு நீண்ட கட்ட போராட்டத்திற்குப் பிறகு அவளை மீட்டு எங்களிடம் தந்துள்ளனர். இளைஞர்களே தயவு செய்து அந்த vape-பை தூக்கிப்போடுங்கள்... அது வேண்டாம்...உங்கள் உயிரைக் கொன்றுவிடும்" எனக் கெஞ்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
vape-க்கு அடிமையான இளம் பெண் 'கைலா பிளைத்' கூறுகையில்,: எனது நண்பர்கள் vape புகைப்பதைப் பார்த்து நானும் அதில் ஆர்வம் கொண்டேன். ஆரம்பத்தில் vape மிகவும் பாதுகாப்பானது என நினைத்தேன். தொடர்ந்து அதைப் பிடிக்க ஆரம்பித்து அதைப் பற்றின ஆபத்தான செய்திகள் குறித்துத் தெரிந்தும் மீண்டும் அதைப் பாதுகாப்பானது என நினைக்கும் அளவுக்கு அதற்கு அடிமையானேன். இப்போது உயிர் பிழைத்து வந்துள்ளேன். vape குறித்து நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது. அதை இனி என் வாழ்வில் தொடமாட்டேன்... அதன் பக்கம் நெருங்கவே மாட்டேன் என அச்சத்துடன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பேப்பர் கப்பில் டீ, காபி குடிச்சா என்ன ஆகும்.? கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க.! - can we drink tea in paper cup