சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், "அண்மையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த தங்கலான் திரைப்படத்தில் சில காட்சிகள் எங்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "புத்த மதத்தை உயர்த்துவதற்காக வைணவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் தங்கலான் திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் இத்தகைய சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தின் நாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
படத்தின் பட்ஜெட் 100 கோடி என்று கூறப்படும் நிலையில் நேற்று வரை இத்திரைப்படம் தற்போது வரை 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தங்கலான் திரைப்படம் 19-ம் நூற்றாண்டில், கோலார் தங்க வயலில் தங்கம் எடுக்க அழைத்துச் செல்லப்படும் தமிழக மக்களின் வாழ்க்கை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.
இத்திரைப்படத்தின் படத்தின் கதை, இயக்கம், நடிகர்களின் அற்புதமான நடிப்பு, இசை ஆகியவற்றுக்காக ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். அதேபோல் சில எதிர்மறையான விமர்சனங்களும் வந்துகொண்டு இருக்கின்றது. இருப்பினும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் இத்திரைப்படம் விரைவில் 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மஞ்சள் நிறத்தில் கட்சிக் கொடி.. விஜயகாந்த் பாணியை தேர்வு செய்துள்ளாரா விஜய்?