சென்னை: அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம் போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றவர் இயக்குநர் விஷ்ணு வர்தன். இவர் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியான பில்லா திரைப்படத்தை, இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆரம்பம் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது.
'ஷெர்ஷா' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான விஷ்ணு வர்தனுக்கு, முதல் படத்திலயே தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக நடிகர் சல்மான் கானுடன் புதிய படத்திற்காக இணைந்துள்ளார். இந்நிலையில், தற்போது மறைந்த நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளியை வைத்து ரொமாண்டிக் எண்டர்டெய்னர் ஜானரில் படத்தை இயக்கி வருகிறார்.
ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை, 'மாஸ்டர்' படத்தை தயாரித்த XB ஃபிலிம் கிரியேட்டர்ஸின் சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் உள்ள பல்வேறு நகரங்களில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்தியாவில் பெங்களூரு மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. தமிழில் விஷ்ணு வர்தனின் கம்பேக் படம் அழகான காதல் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். மேலும், நடிகர்கள் சரத் குமார், பிரபு கணேசன், குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விஷ்ணு வர்தன் ஆகியோர் இணைந்து முன்பு பணிபுரிந்த படங்களின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இப்போது அந்தக் கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளைக் கவனிக்கிறார்.
ஃபெடரிகோ கியூவா ஆக்ஷன் காட்சிகளை இயக்க, அனு வர்தன் ஆடைகளை வடிவமைக்கிறார். தினேஷ் பாடல்களுக்கு நடனம் அமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் விஷ்ணு வர்தன் தமிழ் படம் இயக்க உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
இதையும் படிங்க: அயலான், கேப்டன் மில்லர் படங்கள் ஓடிடியில் வெளியானது!