சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநரான ஹரி, சாமி, அருள், தாமிரபரணி, சிங்கம் என கமர்ஷியல் படங்களை எடுப்பதில் கில்லாடி. இவரது படங்கள் எப்போதுமே ஒருவித விருவிருப்புடன் ஆடியன்சை திருப்திப்படுத்துவது போல் இருக்கும். கடைசியாக அருண் விஜய் நடித்த யானை படத்தை இயக்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்க இருந்தார். ஆனால், சூர்யா கங்குவா படத்தில் பிஸியாக இருப்பதால் அந்த படம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது விஷாலை வைத்து "ரத்னம்" என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார்.
ஏற்கனவே விஷால், ஹரி கூட்டணியில் உருவான தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் இருவருக்கும் மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. இரு வெற்றிகளைத் தொடர்ந்து மூன்றாவது முறை ரத்னம் படத்தில் இணைந்துள்ள விஷாலுக்கு இப்படத்தில் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
மேலும், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். விஷாலின் 34-வது படமான ரத்னம் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த மாதம் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் பெற்றது. அந்த வகையில், "படத்தின் கதை புதுமையாக இருந்தாலும் அதனைச் சொன்ன திரைக்கதை மிகவும் பழையதாக இருந்தது" என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.
இதுமட்டும் அல்லாது, "ஹரியின் வழக்கமாக பாணியில் இல்லாமல் இருந்தாலும் அவரது வெட்டு, குத்து, அரிவாள் இதிலும் அதிகம் இருந்தது. படம் முழுக்க ரத்த வாடை வீசியதால் பார்வையாளர்களை முகம் சுழிக்கும் வகையில் இருந்தது" என்று நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளானது.
மேலும், கிட்டத்தட்ட ரூ.15 கோடி அளவில் மட்டுமே இப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த கூட்டணி மூன்றாவதாக வெற்றியை பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் உலாவருகிறது.
இதுபோன்ற சூழலில், இப்படம் இன்று (மே 23) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மஞ்சும்மல் பாய்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!