சென்னை: நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ’மகாராஜா’ திரைப்படம் சீன மொழியில் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகிறது. இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து அவரது 50வது திரைப்படமாக கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மகாராஜா'.
இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், அபிராமி, முனிஷ்காந்த், நட்டி, சிங்கம் புலி, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 'மகாராஜா' திரையரங்குகளில் வெளியானது முதல் அனைவரது பாராட்டையும் பெற்றது. சாதாரண பழி வாங்கும் கதையை நான் லீனியர் (Non linear) முறை திரைக்கதையுடன் விறுவிறுப்பாக சொன்ன விதத்தில் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் பாராட்டை பெற்றார்.
Maharaja will be released in China on 29 November by @AlibabaGroup #Maharaja#VJS50@VijaySethuOffl @PassionStudios_ @TheRoute pic.twitter.com/LZawPK9zy3
— Nithilan Saminathan (@Dir_Nithilan) November 15, 2024
மேலும் விஜய் சேதுபதி தனது 50வது படமாக ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்ததற்கு பாராட்டை பெற்றார். இதுமட்டுமின்றி மகாராஜா படத்தில் நடிகர் சிங்கம் புலியின் நடிப்பு இப்படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்களை மகிழ்வித்து வந்த சிங்கம் புலி, இப்படத்தில் எவரும் எதிர்பாராத வகையில் முக்கியமான கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த் முதல் அனைவரும் மகாராஜா படத்தை பாராட்டினர். இப்படம் திரையரங்குகளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி மகாராஜா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி அதிக பார்வையாளர்கள் பார்த்த இந்திய படங்கள் வரிசையில் முதல் இடம் பிடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சூர்யா திரை வாழ்வில் அதிக வசூல்; 'அமரன்' திரைப்பட வசூலை முறியடித்த 'கங்குவா'!
இந்நிலையில் மகாராஜா திரைப்படம் சீன மொழியில் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. மகாராஜா படத்தை அலிபாபா நிறுவனம் சீனாவில் வெளியிடுகிறது. இந்த அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்கள், விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்